பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலோச் கனடாவில் மர்ம மரணம் – பாகிஸ்தான் ஐ எஸ் ஐ யின் சதியா ?

பலுச் மனித உரிமை ஆர்வலர் கரிமா பலுச் மரணத்தில் மர்மம் உள்ளதாக சந்தேகித்துள்ள இந்தியா, அதுகுறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில், அரசு மற்றும் ராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தவர், கரிமா பலுச், 37. பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்து வந்த இவர், மக்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வந்தார். பின்னர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடிபெயர்ந்து வசித்து வந்த கரிமா பலுச், கடந்த, 20ம் தேதி திடீரென காணாமல் போனார்.

இதையடுத்து, அவரை தேடும் பணிகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், டொரோன்டோ மாகாணத்தில், அதற்கு அடுத்த நாள், உயிரிழந்த நிலையில், அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதை, டொரோன்டோ காவல் துறை, உறுதிபடுத்தியது. எனினும், அவரது மரணத்தில், எந்த மர்மமும் இல்லை என, கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கரிமா பலுச்சின் மரணம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில், மர்மம் இருப்பதாக, இந்தியா சந்தேகித்துள்ளது. கரிமா மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளது.இதேபோல், இந்த மரணத்தில் பாக்., உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பதாக பலுசிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு ஆர்வலர் நயேலா குவாத்ரி பலுச், குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கரிமா கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பலுச் ஆர்வலர்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதை நினைக்கும்போது அச்சமாக உள்ளது. பாக்., உளவுத் துறைக்கு இதில் தொடர்பு உள்ளது,” என்றார்.கடந்த, 2016ல், பி.பி.சி., செய்தி நிறுவனம், செல்வாக்குமிக்க மற்றும் உத்வேகம் அளிக்கும் உலகின், 100 சிறந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டது. அதில், கரிமாவின் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.