பயங்கரவாதத்தை அழிப்பதும் துாய்மை பணி தான்: பிரதமர் மோடி

உ.பி., மாநிலம், குஷி நகர், தியோரியாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, அவர் திறமையான, நேர்மையான அரசுக்கு ஓட்டளிக்க, மக்கள் முடிவு செய்து விட்டனர். அதனால், இப்போது எதிர்க்கட்சிகள் மல்லாக்க கவிழ்ந்து விட்டன.உ.பி.,யில், அகிலேஷ் மற்றும் மாயாவதி முதல்வராக பதவி வகுத்த காலத்தை விட, குஜராத்மாநிலத்தில், நான் அதிக காலம் முதல்வராக இருந்துள்ளேன்; மக்கள்,பிரதமர் பதவியையும் அளித்தனர்.ஆனால், அந்த பதவியையோ, அதிகாரத்தையோ, என் குடும்பத்துக்காக எப்போதுமே பயன்படுத்தியது இல்லை. ஏழ்மையில் இருந்த என் குடும்பம், பணக்காரர்களாக மாறவும் இல்லை. மக்கள் அளித்த அதிகாரத்தை, அவர்களின் நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் மட்டுமே பயன்படுத்தினேன். இதுவரை நான், ஜாதி அரசியலில் ஈடுபட்டது கிடையாது;

ஆனால், இப்போது, என் ஜாதி சான்றிதழை, இவர்கள் கேட்க துவங்கியுள்ளனர். நான், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தவன் தான். ஆனால், இந்தியாவை, இந்த உலகத்திலேயே முன்னோடி நாடாகமாற்றுவதே, என் கனவு.ஜாதிய தலைவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, நான் ஏழை ஜாதி. ஏழ்மை தான், என் ஒரே அடையாளம். ஏழ்மையை
சந்தித்தவன்; அதன் வலியை உணர்ந்தவன். மக்களின் ஆசியால், நாட்டுக்கு சேவையாற்றும் வாய்ப்பையும் பெற்றவன்.இப்போது என்னிடம் ஜாதி சான்றிதழ் கேட்பவர்கள், அதிகாரத்தில் இருந்த போது, செல்வத்தையும், சொத்துக்களையும் குவித்தவர்கள். குஜராத் முதல்வராக நான் பதவி வகித்த காலத்தில், என் அனைத்து விபரங்களுமே, இந்த நாடு முன், திறந்த புத்தகமாக உள்ளது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை, ‘நடந்தது நடந்து விட்டது’ என சொன்னது போல, இப்போது, ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் நடந்த, தலித் பெண் பாலியல் பலாத்கார விவகாரத்தையும், காங்கிரஸ் கட்சி மறைக்க முயற்சிக்கிறது. அங்கு நடப்பது, பெரும்பான்மையற்ற காங்கிரஸ் ஆட்சி.இது குறித்து,ஆவேசமாக கருத்து சொன்ன, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, ராஜஸ்தானில் நடக்கும் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறாதது ஏன்? அதை விடுத்து, முதலை கண்ணீர் வடிப்பதால் என்ன பயன்.நியாய் என, வாய்க்கு வாய் சொல்லும் காங்கிரஸ் தலைவர், பலாத்காரவாதிகள்குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? இந்த குற்றங்களுக்கு, மரண தண்டனை சட்டம் கொண்டு வந்த காவலாளிகள் நாங்கள்.

அல்வார் விவகாரத்தை ஏன் மறைக்க முயற்சிக்க வேண்டும்? அவர்களை பொறுத்த வரை, ஊழலாகட்டும்,சீக்கியர்களுக்கு எதிரான கலவரமாகட்டும், விலைவாசி உயர்வாகட்டும், எல்லாவற்றுக்குமே, ‘நடந்தது நடந்து விட்டது’என்பதே, பதிலாக இருக்கிறது.தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பயங்கரவாதிகளை நோக்கி, ராணுவத்தின் துப்பாக்கிகள் திரும்பி விட்டன என, எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்கின்றன. இன்று காலை, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில், ஷோபியானில் நடந்த என்கவுன்டரில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஓட்டுப்பதிவு நடக்கும் நேரத்தில், இரண்டு பயங்கரவாதிகளை, மோடி கொன்று விட்டதாக கூறுகின்றனர்.பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், நம் வீரர்கள், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டுமா… எப்படியெல்லாம் எதிர்க்கட்சியினர் நாடகமாடுகின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்த தினத்தில் இருந்தே, பயங்கரவாதிகள் கொல்லப்படுகின்றனர். நாட்டை துாய்மைப்படுத்தும் பணியில், இதுவும் ஒன்று தான். பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை துாய்மைப்படுத்துகிறோம். இவ்வாறு, மோடி பேசினார்.