பந்த்; தமிழகத்தில் ஆதரவு இல்லை; பஸ்கள் ஓடின முக்கிய வீதிகளில் கடைகள் அடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைமையிலான அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இன்று (செப்.,10) நாடு முழுவதும் பந்த் அறிவித்துள்ளது. இந்த பந்த்தால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் ஆட்டோக்கள், பஸ்கள் ஓடின. சில முக்கிய வீதிகளில் பாதி அளவு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வழக்கம் போல் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களில் அரசு பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தின் சில பகுதிகளில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் காரணமாக சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5000 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. லாரி, ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

வழக்கம் போல் இயங்கிய திருச்சி காந்தி மார்க்கெட்.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை : பெட்ரோல் – டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த நாடு தழுவிய பந்த்திற்கு ஆதரவு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.