நோபல் பரிசுக்கு நீங்க தகுதியானவரா? – ட்ரம்பின் பதில்

நோபல் பரிசில் எனக்கு ஆர்வம் இல்லை, என்னை பொறுத்தவரை உலகிற்கு வெற்றித்தான் தேவை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவுடன் ஏற்பட்ட சமூக உறவுக்கு முயற்சி எடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நீங்கள் நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவரா? என்று பத்திரிக்கையாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர், இதற்கு ட்ரம்ப் பதிலளிக்கும்போது, ”எனக்கு என்ன தேவை என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கு இந்த உலகிற்கான வெற்றித்தான் தேவை. அதுதான் எனக்கான பரிசு. அதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். கடந்த பல வருடங்களாக வடகொரியா – தென்கொரியா இடையே சமூக உறவு நினைத்து பார்க்க முடியாததாக இருந்தது.

ஆனால் தற்போது இந்த இரு நாடுகளுக்கு இடையேயான இணக்கம் வடகொரியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சிறந்ததாக இருக்கப் போகிறது. இதற்கு உதவிய சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நோபல் பரிசில் எனக்கு ஆர்வம் இல்லை” என்றார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுஆயுத சோதனைகளை நடத்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால் எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணுஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையே இணக்கம் ஏற்பட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உதவியது குறிப்பிடத்தக்கது.