நோட்டாவுக்கு அதிக ஓட்டு, தேர்தலுக்கே வேட்டு – டுவிட்டரில் டிரெண்டிங்

நோட்டா தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது.

தேர்தலில் ஓட்டளிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. ஆனால் 100 சதவீதம் ஓட்டு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே உள்ளது. பல மாநிலங்களில் 50 முதல் 60 சதவீதம் ஓட்டுகள் விழுவதே பெரிய விஷயமாக உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தால் நோட்டா முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாவிட்டால் கூட நோட்டா என்ற வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தலாம். அதேசமயம் வேட்பாளர்களை விட நோட்டா அதிக ஓட்டு பெற்றாலும் வேட்பாளர்களில் யார் அதிக ஓட்டுகளை பெற்றுள்ளார்களோ அவர்களே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இதனால் நோட்டா குறித்த விமர்சனம் உள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் அஷ்வினி குமார் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் நோட்டாவை விட வேட்பாளர்கள் குறைந்த ஓட்டுகளை பெற்றால் அந்த தொகுதியின் தேர்தல் முடிவை ரத்து செய்யவும், புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும், நோட்டாவை விட குறைந்த ஓட்டுகளை பெற்ற வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று(மார்ச் 15) வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், உரிய விளக்கம் அளிக்கும்படி இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. பலரும் #NOTA என்ற ஹேஷ்டாக்கில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அப்படி பதிவிட்ட சிலரின் கருதுக்கள் இங்கே…

* ஒருவேளை நோட்டா ஜெயித்தால் அந்த தொகுதியில் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது. அப்போது தான் அது சரியாக இருக்கும்.

* தற்போதைய சூழ்நிலையில் நோட்டா தேவை. அதை இன்னும் வலிமை உள்ளதாக மாற்ற வேண்டும்.

* முதலில் மக்களிடையே நோட்டா பற்றி போதுமான விழிப்புணர்வு வேண்டும். தேர்தல்களில் நோட்டா மீது ஓட்டுகளின் சதவீதம் அதிகரிக்கும் போது, ​தேர்தல் முடிவுகளை ரத்து செய்வதற்கான பிரச்னை தானாகவே கவனத்தை ஈர்க்கும். நோட்டா ஒரு விருப்பமாக இருக்கட்டும். இது நல்ல வழி.

* இது தேவையான ஒன்று தான். ஆனால் நோட்டாவுக்கான விதிமுறைகள் முற்றிலும் ஜனநாயக முறையற்றது.