நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் – இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

நேபாளம், இலங்கையிலும் பா.ஜ., அரசு அமைய வேண்டும் என்பதே, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இலக்கு,” என, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறியுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த, திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ், தனியார், ‘டிவி’ ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:
கடந்த, 2018ல், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கு தயாராவது குறித்து, அப்போது கட்சியின் தேசிய தலைவராக இருந்த, அமித் ஷாவை சந்தித்தோம். கட்சியின் வட கிழக்கு பிராந்திய செயலர் அஜய் ஜாம்வாலும் உடனிருந்தார். நாட்டின் பல மாநிலங்களில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது குறித்து, அஜய் ஜாம்வால் குறிப்பிட்டார்.

அதற்கு, ‘நேபாளம், இலங்கையிலும் பா.ஜ.,வுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தி, ஆட்சியை பிடிக்க வேண்டும்’ என, அமித் ஷா கூறினார். உலகிலேயே மிகப் பெரிய கட்சியாக, பா.ஜ.,வை மாற்றியவர், அமித் ஷா. கேரளாவில், கம்யூனிஸ்ட் மற்றும் காங்., மாறி மாறி ஆட்சி அமைப்பதை மாற்றுவோம். அங்கு, பா.ஜ., அரசை அமைப்போம்.மேற்கு வங்கத்தில், வரும் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., தோல்வி அடையும்; பா.ஜ., ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.