நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் பலி

நேபாளத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக பெய்து வரும் பருவமழை அந்த பகுதியை முற்றிலுமாக வெள்ளமயமாக்கியது.

ராணுவ வீர்ர்கள் மீட்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் காணாமல் போனதாகவும் பல மக்கள் காயமடைந்தாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிறைய வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடந்துள்ளன. 1500க்கும் மேற்பட்ட பேர் மீட்கப்பட்டுள்ளனர். 16,000 பேர் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வேறு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் பெய்த மழை மாதாந்திர சராசரி மழையை விட அதிகமானது.

இதனால் மலைப் பிரதேசங்கள் பலவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இது தெற்கு நேபாளத்தைக் கடந்து இந்திய எல்லையைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்வரை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தரை வழி, வான் வழிப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 3,182 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 28 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 26,45,533 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில பேரிடர் நிர்வாகக் குழு தகவல் அளித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் மூழ்கி 5 பேர் இறந்ததாகவும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சுமார் 12 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த நிலையை சமாளிக்கத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருகின்றன. இப்போது நாங்கள் நிலைமையை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் எந்த உதவியும் கேட்கவில்லை” என பிபிசியிடம் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள், மருந்துகள் என அனைத்தும் அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 16,596 பேர் 327 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திங்களன்று வெளியிட்ட செய்தி அறிக்கையில் 14 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அசாம் மாநிலத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை இக்குழுவினர் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோரை வெள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

முன்னேற்பாடாக நாடு முழுவதும் 119 தேசியப் பேரிடர் மீட்புக்குழு அணிகள் வெள்ளப்பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் தயார்நிலையில் உள்ளன. படகுகள், நீச்சல் வீரர்கள் என தயார்நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்புக்குழு செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிகாரில் தொடர்ந்து மழை பெய்து வருவதனால் அங்கும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 19 பேரிடர் மீட்புக்குழுக்கள் பிகாரின் பல்வேறு பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.