நெ.கண்ணன் விவகாரத்தில் சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது – முதல்வர் பழனிசாமி

‘பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசிய நெ.கண்ணன் விவகாரத்தில், சட்ட ரீதியாகவே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபையின் இரண்டாம் நாளான இன்று, நெ.கண்ணன் கைது குறித்தும், கோலமிட்டவர்கள் கைது குறித்தும் காங்., எம்.எல்.ஏ., பிரின்ஸ் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

அவர் கூறியதாவது: பிரதமர், உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசியதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த கட்சி தலைவர்களாக இருந்தாலும் அவர்களை பற்றி வரம்பு மீறி பேசக்கூடாது. நெ.கண்ணன் விவகாரத்தில் சட்டரீதியாகவே நடவடிக்கை எடுத்துள்ளோம். அவரை கைது செய்ய வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை. இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

சென்னையில் கோலம் போட்டவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ‘கோலம் போட்டவர்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டிருந்தால் பிரச்னை இல்லை. வேறொருவர் வீட்டு வாசலில் கோலமிட்டது குறித்து வீட்டு உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்’ என முதல்வர் விளக்கினார்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, திருநெல்வேலியில் நடந்த ஒரு முஸ்லிம்கள் மாநாட்டில், பிரதமர் மோடி, அமித்ஷாவின் ‘ஜோலி’யை முடிக்க சொன்ன நெ.கண்ணன், பெரம்பலூரில் தனியார் ஓட்டலில் ஒளிந்திருந்த போது கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.