நெருப்பை கக்குகிறது பிலிப்பைன்ஸ் எரிமலை

பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவித்துள்ளது.

மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி 27,000 கிராம மக்கள் அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது விரைவில் வெடிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

கடந்த சில நாட்களாக லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வருகிறது. அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது.
எரிமலை பகுதிகளில் ஏராளமான சுற்றுலா தலங்களும் உள்ளன. அங்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

2006-ல் இந்த எரிமலை வெடித்த போது உயிரிழப்பு ஏதும் ஏற்பட வில்லை. ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் கடும் புயல் வீசிய போது தீக்குழம்புகள் பொங்கி சிதறியதில் 1000 பேர் உயிரிழந்தனர்.

மேயான் எரிமலை 2,640 மீட்டர் உயரமுடையது. தலைநகர் மணி லாவில் இருந்து தென்மேற்கே 330 கி.மீ. தொலைவில் உள்ளது. பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை அவ்வப்போது சீறி உயிர்களை பலி கொண்டு வருகிறது.