‘நெருப்புடா’ பாடலுடன் அறிமுகமாகும் வடிவேலு

‘கத்தி சண்டை’ படத்தில் ‘நெருப்புடா’ பாடல் பின்னணியில் வடிவேலு அறிமுகமாவது போன்று காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

விஷால்,தமன்னா,வடிவேலு,சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கத்தி சண்டை’. சுராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்திருக்கிறார். நந்தகோபால் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று,இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. நவம்பர் 18ம் தேதி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.

நாயகனாக மட்டுமே நடித்து வந்த வடிவேலு,இப்படத்தின் மூலம் மீண்டும் காமெடியன் வேடத்துக்கு திரும்பியிருக்கிறார். சுராஜ் – வடிவேலு கூட்டணி படங்களான ‘மருதமலை’ மற்றும் ‘தலைநகரம்’ காமெடிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவை.

அதே போன்று இப்படத்தில் மனநல மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வடிவேலு. இப்படத்தில் வடிவேலு அறிமுகமாகும் காட்சியின் பின்னணியில் ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலுடன் இடம்பெற்றிருக்கிறது. மேலும்,ஜெயலுக்குள் சென்று ஒரு கைதியுடன் பேசுவது போன்று அக்காட்சி இடம்பெறும்.

எடிட்டிங் எல்லாம் முடிந்து,இக்காட்சியை மிகவும் ரசித்திருக்கிறது படக்குழு. “‘நெருப்புடா’ பாடல் சரியாக இருக்கிறதா,இல்லையென்றால் வேறு ஒரு பின்னணி இசை இடம்பெறட்டுமா” என்று இசையமைப்பாளர் கேட்ட போது “இது தான் சூப்பர்” என்று கூறியிருக்கிறது படக்குழு.