நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர்,சரத்குமார் நேரில் ஆஜர்

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது.

இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. அரசியல் கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதமும், காமாட்சி விளக்கு உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வாக்காளர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இரவு-பகலாக நடந்த தேர்தல் முறைகேட்டை தடுக்க முடியாமல் தேர்தல்கமிஷன் அதிகாரிகள் திணறினர். இதுகுறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இதன் தொடர்ச்சியாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன்  வீடுகள்,  அலுவலகம், என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக முக்கிய ஆவணங்களும் மற்றும் கட்டுக்கட்டாக ரொக்க பணமும் சிக்கின. இதைதொடர்ந்து  3 பேருக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது.

சென்னை வருமான வரித்துறையினர் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அ.தி.மு.க முன்னாள் எம்பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகினர்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர், இன்று காலை அடுத்தடுத்து சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்கள். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவர்களிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.