நீதிபதிகளை சந்திக்க ஐ.நா.,வுக்கு இலங்கை பார்லிமென்ட் தடை

இலங்கை நீதிபதிகளுடன் ஐ.நா., மனித உரிமை வல்லுனர்கள் ஆலோசிப்பதற்கு, அந்நாட்டு பார்லிமென்ட் தடை விதித்துள்ளது.அண்டை நாடான இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் உடனான போர், 2009ல் முடிவுக்கு வந்தது. போர்க்குற்றங்கள் குறித்த வழக்குகள் இலங்கை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையில், ஐ.நா., எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமை பிரிவு துாதர் கிளமென்ட் வோல், தெற்காசிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இலங்கையின் மூத்த நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்தவும், கிளமென்ட் தலைமையிலான, மனித உரிமை பிரிவு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை பார்லிமென்டில், நேற்றுமுன்தினம் பேசிய, எதிர்க்கட்சி தலைவர், மகிந்த ராஜபக்சே, ”இலங்கை நீதிபதிகளுடன் ஐ.நா., மனித உரிமை பிரிவு வல்லுனர்கள் ஆலோசிக்க அனுமதிக்க கூடாது. போர்க்குற்ற வழக்கு விசாரணை தொடர்பாக அவர்கள் பேச வாய்ப்பு உள்ளது. எனவே, இலங்கையின் நீதி பரிபாலன முறையில், வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க வேண்டாம்,” என்றார்.

பார்லிமென்ட்டில் நேற்று பேசிய சபாநாயகர், கரு. ஜெயசூர்யா, ”இலங்கை நீதிபதிகளுடனான, ஐ.நா., அமைப்பினரின் சந்திப்பு தடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தை, என் கவனத்துக்கு கொண்டு வந்த, எதிர்கட்சிக்கு நன்றி. அதனால்தான் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடிந்தது,” என்றார்.
இலங்கையில், 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரில், 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அப்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு, சர்வதேச நாடுகள், கடும் கண்டனம் தெரிவித்தன. அவரது ஆட்சிக்காலத்தில், மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன என, குற்றச்சாட்டுகள் எழுந்தன.