நிலவேம்பு குறித்து சர்ச்சை ட்வீட்; முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்கு பதியலாம்: உயர் நீதிமன்றம்

நிலவேம்பு கசாயம் பற்றிய வதந்திகளை பரப்பும் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் கமல் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்டோபர் 18-ம் தேதி நிலவேம்பு கசாயம் குறித்து ட்விட்டரில் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார். சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை தனது இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அரசின் செயல்பாடுகள் மற்றும் நிலவேம்பு கசாயம் குறித்து கமல் தவறான தகவலைப் பரப்புவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டுமென அக்டோபர் 19-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அந்த மனு மீது கடந்த 5 நாட்களாக நடவடிக்கை எடுக்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் வழக்கு தொடர்ந்தார். தமிழக முதல்வர் பழனிசாமி மீதான பொறாமையிலும், வெறுப்பிலும் அரசுக்கு எதிராக புரட்சி செய்வது போல செயல்படும் கமல், நாட்டின் மதசார்பின்மைக்கும், அமைதிக்கும் ஊறுவிளைவித்து அரசுக்கு எதிராக மக்களை திசைதிருப்பலாம், அவரது கருத்தால் மக்களிடையே பதற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்று தேவராஜன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மேலும் தேவராஜன் தனது கோரிக்கையில் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை, அறிஞர் அண்ணா சித்த மருத்துவ மையம் மற்றும் நடிகர் கமல்ஹாசனிடம் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, மனுதரார் புகார் மனு மீது காவல்துறையினர் உரிய முறையில் சம்மந்தப்பட்ட துறையினரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

அவ்வாறு நடத்தப்பட்ட விசாரணையில் மனுதாரர் புகார் குறித்து முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.