நிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனிலிருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவல், அடுத்த மாதம், 19 வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி, 48, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கி இருந்த நிரவ் மோடியை, அந்நாட்டு போலீசார், கடந்த மார்ச்சில் கைது செய்தனர்.

நிரவ் மோடியை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்க துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவரது ஜாமின் மனு, பல்வேறு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு லண்டனில் உள்ள, வான்ட்ஸ்வொர்த் சிறையில், அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள ‘வெஸ்ட்மினிஸ்டர்’ மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம், நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை, அடுத்த மாதம், 19 வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ‘நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு, மே 11ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெறும்’ என, அவர் அறிவித்தார்.