நிரந்தர அதிபராக தொடர சிறிசேன திட்டம்?

‘இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின், ௧௯-ஏ பிரிவை, ரத்து செய்ய வேண்டும்’ என, அதிபர், மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். இதன்படி, அந்நாட்டின் நிரந்தர அதிபராக தொடர, அவர் விரும்புவது தெரிய வந்துள்ளது.

இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே, 2010ல், அரசியல் சட்டத்தின், ௧௮-ஏ பிரிவை ஏற்படுத்தினார். அதன்படி, அதிபராக இருப்பவர்கள், எத்தனை முறை வேண்டுமானாலும், தேர்தலில் போட்டியிடலாம் என, சட்டத்தை ஏற்படுத்தினார். ஆனால், 2015ல், அதிபராக இருந்த சிறிசேன, 19-ஏ என்ற, அரசியல் சட்டப்பிரிவை ஏற்படுத்தி, முன்னாள் அதிபர், ராஜபக்சே கொண்டு வந்த, 18-ஏ பிரிவை நீக்கினார்.

அதன்படி, அதிபராக இருப்பவர்கள், இரண்டு முறை மட்டும் தான், தேர்தலில் போட்டியிட முடியும்; மூன்றாவது முறையாக போட்டியிட முடியாது என, சட்டம் கொண்டு வந்தார். இந்நிலையில், தான் கொண்டு வந்த, 19-ஏ அரசியல் சட்ட பிரிவை, ரத்து செய்ய, அதிபர் விரும்புகிறார். இதன் மூலம், இலங்கையின் அதிபராக, பல காலம் தொடர அவர் விரும்பு வது, வெளிப்பட்டுள்ளது.
அதிபர் பதவியிலிருந்து வெளியேற விரும் பாத சிறிசேன, நேற்று, ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது: நாம் பதவிக்கு வந்து, நான்காண்டுகள் ஆகியுள்ள நிலையில், நாம் செய்த தவறை, மறுபடியும் ஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நம் ஆட்சி, இன்னும், நான்கு மாதங்களில் முடிய போகிறது; புதிதாக தேர்தல் வரவுள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை, அரசியல் சட்டம், 19-ஏ பிரிவை ரத்து செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. நாம் செய்த மிகப் பெரிய தவறு, 19-ஏ பிரிவை அறிமுகப்படுத்தியது தான். அதனால் தான், இந்நாட்டில், அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது. இதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. நான் ஒரு பக்கம் இழுப்பதாகவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மறுபுறம் இழுப்பதாகவும், மக்கள் கருதுகின்றனர். இவ்வாறு, அதிபர் சிறிசேன பேசினார்.

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், சில மாதங்களுக்கு முன், அவரின் பதவியை, அதிபர் சிறிசேன, திடீரென பறித்தார். எனினும், ரணில் விட்டுக் கொடுக்காமல், சட்டப்படி போராடினார். இரண்டு மாதங்கள், பிரதமர் இல்லாமலேயே, அந்நாடு இயங்கியது. அந்நாட்டின் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, மீண்டும் பிரதமரானார் ரணில். இதனால், ராஜபக்சேவை, பிரதமர் பதவியில் அமர்த்த நினைத்த, சிறிசேனவின் முயற்சி தோல்வி அடைந்தது.