- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மார்ச் 31-ல் வைகோ நடைபயணம்: திமுகவுடன் கூட்டணி தொடரும்; மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்
நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்ச் 31-ம் தேதி மதுரையில் இருந்து வைகோ தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என மதிமுக மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதிமுக மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை வகித்தார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திராவிட இயக்கத்தின் ஒற்றுமையைக் கட்டமைக்கிற வரலாற்றுக் கடமையை மதிமுக மேற்கொண்டு வருகிறது. திமுகவுடன் நட்பும் தோழமையும் தொடரும்.
காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, அரசியல் சட்ட அமர்வின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மார்ச் 31-ல் மதுரையில் இருந்து வைகோ தலைமையில் பரப்புரை நடைபயணம் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசு நீட் தேர்வை கைவிடும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். உச்ச நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கிட வேண்டும். செம்மொழி தமிழ் உயர் ஆய்வு மையத்தை மாற்றும் முடிவை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களில் சமஸ்கிருத, இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக நிறுவ வேண்டும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்க பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பிறகு, செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: கர்நாடகாவில் தேர்தல் நடக்கவுள்ளதால், காவிரி விவகாரம் குறித்து பேச தமிழக அனைத்துக் கட்சி குழுவினை சந்திக்க பிரதமர் மறுத்து வருகிறார். 4 மாநில முதல்வர்களை அழைத்து பிரதமர் பேசினால், அது பித்தலாட்டமாகும். பாஜக அரசு காவிரி விவகாரத்தில் நரித்தனமான தந்திரம் செய்கிறது.
தந்தை பெரியார் இல்லையென்றால் இன்றைக்கு சமூக நீதி இல்லை. ஆனால் பாஜகவை சார்ந்த நபர் (எச்.ராஜா) தொடர்ந்து பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசி வருகிறார். மதிமுகவுக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், இது தன்மானத்துக்கு விடுக்கப்பட்ட சவால். பெரியார் சிலை அருகில் வருவதற்குள் இல்லாமல் போய்விடுவீர்கள்.
மன்னிப்புக் கோர வேண்டும்
பெரியாரை அவமதிக்கும் வகையில் பேசியதற்கு அந்த நபர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த திமிர் பேச்சை தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை விளக்க வேண்டும். எம்ஜிஆரின் ஆட்சியை என்னால் கொடுக்க முடியும் என்று கூறியிருப்பது ரஜினியின் உரிமை. அரசியலில் வெற்றிடம் உள்ளது, அதை நான் நிரப்புவேன் என்று ரஜினி பேசியதை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். இவ்வாறு வைகோ கூறினார்.