நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக விஜய் டிவி 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும். பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை

புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்- 3 இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ஒரு போட்டியாளராக மதுமிதா பங்கேற்றார்.

ஆனால், கடந்த சனிக்கிழமை வெளியான எபிசோடில் மதுமிதா நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவதாக காட்டப்பட்டது. அப்போது நிகழ்ச்சி மேடையில் தோன்றிய மதுமிதா கையில் கட்டுடன் காணப்பட்டார்.

மதுமிதா வெளியேற்றப்பட்டது தொடர்பாக விளக்கம் கூறிய பிக்பாஸ், “டாஸ்க்குக்கு பின் நடந்த ஒரு விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத் தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டார். அவரின் இந்த செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு அவர் உடனடியாக வெளியேற்றப்பட்டார்” என்று அறிவித்தார்.

அப்போது பேசிய கமல், “கொஞ்ச நாட்கள் முன்பு வரை வெற்றி வாய்ப்பு உள்ளவர்கள் பேரில் உங்கள் பெயரும் அடிபட்டது. வெளியே மட்டும் அல்ல உள்ளே இருப்போர் (பிக்பாஸ் வீட்டில் இருப்போர்) முன் வைத்த பேரிலும் உங்கள் பெயர் இருந்தது. இப்போதும் கேப்டன்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்களை வெளியேற்றுவதற்கான அனைத்து வாய்ப்பும் அகன்று, தட்டில் வைத்து கொடுக்கப்பட்ட இந்த வெற்றியை தட்டிவிட்டுவிட்டு இங்கே வந்து நிற்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது,” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய மதுமிதா, “நான் தைரியமான பெண் என்று எல்லாருக்கும் தெரியும். என் தைரியம் எந்த அளவுக்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்தவொரு முடிவுக்கு வந்திருப்பேன்,” என்றார்.

மேலும் அவர், “இதுகுறித்த காட்சிகளில் ஒளிப்பரப்பலாமா அல்லது வேண்டாமா என்பதை அவர்கள் (விஜய் டீவி தரப்பு) முடிவு செய்யட்டும். என் கருத்தை நான் அங்கு வெளிப்படுத்தினேன். என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள், கேப்டன்சிக்கு தகுதி இல்லாதவள், மதுமிதா இருந்தால் நாங்கள் இருக்கமாட்டோம் என பேசிய போது, யார் முட்டாள் என தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்காக இப்படி செய்தேன்,” என்றார்.

கமல், “உங்கள் எதிர்ப்பை நீங்கள் அஹிம்சை முறையில் வெளிப்படுத்தி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

ஆனால், இறுதிவரை பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது, மதுமிதாவிற்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது குறித்த காட்சிகள் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்படவில்லை.

இந்த சூழலில் விஜய் இன்று கிண்டி காவல் நிலையத்தில் மதுமிதாவுக்கு எதிராக புகார் அளித்துள்ளது.

பிக் பாஸ்: மதுமிதா தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள யார் காரணம்?
பிக் பாஸில் வெளியேற்றப்பட்ட சரவணன் – அழுத சக போட்டியாளர்கள்

புகார் குறித்த விவரித்த கிண்டி காவல் ஆய்வாளர் சந்துரு, “நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக 32 லட்சம் ரூபாய் பாக்கி தர வேண்டும் என்றும். பாக்கியை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் ‘தற்கொலை செய்து விடுவேன்’ என்றும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாக விஜய் டிவி நிர்வாகம் புகார் அளித்துள்ளது” என்றார்.

இது குறித்து விளக்கம் பெற மதுமிதாவை தொடர்பு கொண்டோம். “சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறேன்” என்ற அவர், இதற்கு மேல் இப்போது எதுவும் பேச முடியாது என்றார்.