தமிழர்களுக்கு நற்சேவை ஆற்றவேண்டியவர்களே நாசம் செய்யும் அரசியல் நாகரிகம்அங்கும் இங்கும் தொடர்கின்றதா?

நாம் தாய்த் தமிழகம் என்று கொண்டாடியும் பூஜித்தும் மதிக்கின்ற தமிழ்நாட்டுக்கு தமிழ் பெயர் சூட்டிய ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு தற்போதைய எடப்பாடி அரசு தயராகுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மெற்றாஸ் என்னும் ஆங்கிலப் பெயரை நீக்கிவிட்டு தமிழ்நாடு என்னும் தமிழ்ப் பெயரை சூடி நிற்கும் எம் “தாய்த் தமிழகம்” கேவலமான அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டு தள்ளாடுகின்றது என்பது உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்தஒன்றே.

ஊழல்களும் மோசடிகளும் நிறைந்த அரசியல் மோகத்தோடு உள்ளேவரும் அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களைத் தொடர்ந்து அதிகாரிகளும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைஅள்ளிச் சென்று தங்கள் வசம் வைத்திருப்பதையே நாடி வருகின்றார்கள் என்பது நன்கு பலனாகியுள்ளது. தமிழ்நாட்டில் இயங்கும் தமிழ்நாடு அரசபோக்கு வரத்துக் கழகத்தை எடுத்துக்கொண்டால, பொது மக்களுக்கான சேவை என்பதை மறந்து, அந்த பொது நிறுவனத்தின் ஊழியர்களை நடுக்கடலில் தள்ளவிட்டது போன்ற செயலைச் செய்துள்ளார்கள் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும். மேற்படி போக்குவரத்துக் கழகங்களை வங்கிகளுக்கு அடமானம் வைத்து பெறப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்களின் ஒரு பகுதியை பலரும் சேர்ந்து விழுங்கி விட்டார்கள். அதற்கு மேலாக மேற்படி தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் அந்திய கால சேமிப்புத் திட்டத்திலிருந்து பெருமளவு பணத்தை கழகத்தின் நிர்வாகச் செலவுகளுக்கு மாற்றி “துரோகம்” செய்துள்ளார்கள் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். தமிழ்நாட்டுக்கு பதவிகளை ஏற்றுக்கொண்டு வரும் ஆளுனர்கள் அனைவருமே பதவிமாற்றம் பெற்று செல்லும்போது தமது வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய்களை நிரப்பிச் செல்லுகின்றார்கள் என்பதும் உண்மையான செய்தியே.

இவ்வாறு தமிழ்நாட்டில் மட்டுமல்ல எமது தாயகமான இலங்கையிலும், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வடக்கு கிழக்கு ஆகிய தமிழர் பிரதேசத்திலும் அரசியல் என்பது இன்று பலராலும் விரும்பப்படாத ஒன்றாகிவிட்டது. இதற்கு மூல காரணம் அரசியலின் பெயரால் அரசியல்வாதிகள் செய்த அநீதிகளும் ஊழல்களும் மோசடிகளும்தான். அதற்கு காரணம் அங்குள்ள தமிழ்த் தலைவர்கள் என்றால் அது மிகையான விமர்சனம் ஆகிவிடாது.

இவ்வாறான ஒரு விரக்தி நிலையில், யாரை நம்புவது என்பதை புரிந்துகொள்ள முடியாமல் அங்கு எமது மக்கள் படும் பாட்டையம் அவஸ்த்தையையும் அனைவரும் கண்டு கொள்ளக் கூடியதாகவே உள்ளது. அரசியல் என்றாலே அது ஆபத்து. ஆகையால் அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வோம் என்ற முடிவுக்கு மக்கள் வருகின்றனர். இங்குதான் மக்கள் மாபெரும் தவறுவிடுகின்றனர்.

அதாவது அரசியலில் இருந்து ஒதுங்குவது என்ற மக்களின் முடிவு பிழையானவர்கள் அரசியல் பதவிகளில் வந்து விடுவதற்கு வழி செய்கின்றது.

தேர்தலில் வாக்களிப்பது ஒருநாள். அதற் கானதேர்தல் பிரசாரங்கள் நடப்பதுஒருமாதம். இந்தக் காலப்பகுதிக்குள் மக்கள் அரசியலை கடுமையாக வெறுக்கின்றனர்.

இந்த வெறுப்பின் விளைவு வாக்களிப்பதில்லை என்பதாக இருக்கின்றது. பெரும் பகுதியான மக்கள் வாக்களிக்காமல் ஒரு பகுதிமக்கள் மட்டுமே வாக்களித்தாலும் ஜனநாயகத்தின் பெயரால் அரசும் ஆளும் தரப்பும் அறிவிக்கப்படும்.

எனவே அரசியலை வெறுத்து தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டாலும் அது எந்த வகையிலும் அரசியலைப் பாதிக்காதென்பது உணர்தற்குரியது.
மிக முக்கியமாக எமது தாயகத்தில் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள உள்ராட்சி மன்றங்களின் தேர்தல்களில் எமது மக்கள் தவறாது வாக்களித்து நியாயமான சேவை நோக்கம் கொண்டவர்களையே தெரிவு செய்யவேண்டும்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளது போன்று சில அரசியல் கட்சிகளை திருத்துவதற்காக வேனும் மக்கள் மாற்றுத் தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்ற உண்மையான வேண்டுகோளையும் நாம் புறக்கணித்துவிட முடியாது.

சில வேளை நாமும் அரசியல்வாதிகளும் திருந்தி ஒட்டு மொத்த வாக்காளர் தொகையில் குறைந்தது அறுபது வீதமானவர்கள் வாக்களிக்கத் தவறினால் அந்தத் தேர்தல் இரத்துச் செய்யப்படும் என்றொரு சட்ட மூலத்தைக் கொண்டு வந்தாலேயன்றி வேறு எந்தவகையிலும் பெரும் பகுதியினர் வாக்களிக்காவிட் டாலும் அது அரசியலை,தேர்தலை பாதிக்காதென்பதுதான் நியதி.

எனவே அரசியலில் இருந்து ஒதுங்குதல் என்ற மக்களின் முடிவு மிகவும் தவறானது.உண்மையில் அரசியல்வாதிகளை நாம் திருத்த வேண்டுமாக இருந்தால்,அரசியல் தொடர்பில் ஒட்டுமொத்தமக்களும் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.

மக்களின் விழிப்பும் அவதானமும் நேர்மையான – மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய அரசியல் தலைவர்களை அதிகாரபீடத்தில் இருத்தும். அவ்வாறு இருத்தும்போது நல்லது நடக்கும்.

ஆனால் நாம் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் தேர்தலில் வென்றவர்களிடம் சென்று விடுகிறது.
ஒரு குறிப்பிட்ட மக்கள் வாக்களித்து அந்த வாக்குகளின் அடிப்படையில் அரசுஅமைப் போர் எல்லாக் குழப்பங்களையும் செய்வர். ஆகையால், அரசியலே எங்களை ஆளப் போகிறது. அரசியலே எங்கள் பொருளாதார சமூக கட்டுமானங்களை தீர்மானிக்கப் போகிறது. எங்கள் எதிர்கால வாழ்வும் வளமும் அரசியலிலேயே தங்கியுள்ளது. ஆகையால் அரசியலில் இருந்து ஒதுங்குதல் என்ற முடிவைக் கைவிட்டு அரசியலை அறிந்து அதற்கேற்றாற்போல் செயற்படுதல் என்ற முடிவை மக்கள் எடுத்தால்,
அரசியலும் ஞானம் நிறைந்த துறையாக மாறும்.