நாம் தயாரிக்கும் திரைப்படங்கள் நாம் வாழும் சூழலில் உள்ள யதார்த்தங்களை, சுவைபடச் சொல்லுகின்றவையாக இருக்க வேண்டும்

திரைக்கதை எழுத்தாளர் கனடா வாழ் பரம் ஜி ஞானேஸ்வரன் வலியுறுத்துகின்றார்.

கனடிய தமிழ் ஊடகத்துறையிலும் வீடு விற்பனைத்துறையிலும் பல ஆண்டுகள் காலமாக சேவை செய்து பலராலும் அறியப்பட்ட பரம் ஜி ஞானேஸ்வரன் அவர்கள் அண்மையில் மொன்றியால் நகரில் சிறப்பாக நடைபெற்ற எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் வெளியிடப்பட்ட “விடியலைத்தேடி” எனும் திரைக்கதை நூலின் ஆசிரியர் ஆவார். அப்புத்தகம் பற்றி அவருடன் நடைபெற்ற நேர்காணல்.
உதயன் பத்திரிகைக்காக நேர்கண்டவர் : எழுத்தாளர் குரு அரவிந்தன்
நேர்காணப்பட்டவர்: பரம் ஜி. ஞானேஸ்வரன்
(நேர்காணும் படம் இணைக்கப்படவேண்டும்- OTO)
விடியலைத்தேடி…

கேள்வி: வணக்கம். திரு. ஞானேஸ்வரன் அவர்களே, பரம்.ஜி என்று பலருக்கும் அறிமுகமான நீங்கள் ‘ஒரு தமிழ் குடும்பத்தின் அகதி வாழ்க்கையை’ கருப்பொருளாகக் கொண்டு ‘விடியலைத்தேடி’ என்ற நூலை வெளியிட்டிருக்கிறீர்கள். எங்கள் வாழ்க்கையை அப்படியே ஒரு ஆவணமாகக் கொண்டு வந்ததற்காக முதலில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுமுன் உங்களைப் பற்றிப் புதிய வாசகர்களுக்காகச் சிறிய அறிமுகத்தை தருவது நல்லதென நினைக்கின்றேன். உங்கள் ஊரைப்பற்றி.. கல்விகற்ற பாடசாலை பற்றி.. உங்கள் குடும்பத்தைப் பற்றி.. கொஞ்சம் சொல்லுங்களேன்.
பதில்: எனது அப்பா நவாலியையும் அம்மா காங்கேசன்துறையையும் பிறந்த ஊர்களாக கொண்டிருந்தபோதும் நான் பிறந்தது மலையகத்தின் தேயிலைத்தோட்டங்கள் நிறைந்த தலாவாக்கொல்லையில். ஆரம்பக்கல்வியை அங்கு தொடங்கினாலும் எனது எட்டாவது வயதில் அம்மா பிறந்த இடமாகிய காங்கேசன்துறை வந்து அம்மண்ணின் பெருமை சொல்லும் நடேஸ்வரக்கல்லூரியில் எனது கல்வியை தொடர்ந்தேன். என்னுடன் சேர்த்து அப்பா அம்மாவிற்கு நாங்கள் ஆறு பிள்ளைகள். குடும்பம் பற்றியும் எனது பின்புலம் பற்றியும், விடியலைத்தேடி புத்தகத்தில் விபரமாக சொல்லி இருக்கின்றேன்.

கேள்வி: நல்லது. எனது தந்தையின் ஊரும் காங்கேசந்துறைதான். நீங்கள் கல்விகற்ற நடேஸ்வராக்கல்லூரியில்தான் நானும் ஆரம்ப கல்வியைக் கற்றேன். அங்கு உங்கள் அண்ணா பி. விக்னேஸ்வரன் நன்கு அறிமுகமான நண்பர். நீங்கள் ஏன் சொந்த நாட்டைவிட்டு புலம் பெயர்ந்தீர்கள்?
பதில்: நான் முதலில் எனது மேல் படிப்பிற்காக எமது தாய் மண்ணை விட்டு 1978ம் ஆண்டு லண்டன் மாநகரம் சென்று இயந்திரப் பொறியியல் துறையில் டிப்ளோமா முடித்தேன். அதன் பின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறைகளில் இருந்த ஆர்வம் காரணமாக லண்டனில் பிரசித்தமான பி.பி.சி தொலைக்காட்சி நிறுவனத்தில் பலவருடகாலமாக நிகழ்ச்சித் தயாரிப்புத் தொழில் புரிந்த அனுபவஸ்த்தர்கள் பலர் இணைந்து நடத்த அப்போது இயங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறைகளில் தயாரிப்பு இயக்கம் பற்றிப் படித்து அத்துறையில் 1983ம் ஆண்டு யூன் மாதம் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றேன்.

கேள்வி: நீங்கள் எப்போது கனடா வந்தீர்கள். கனடாவில் இதுவரை உங்கள் இலக்கிய முயற்சிகள் பற்றிக் குறிப்பிடுங்கள்.
பதில்: 1983 யூலை கலவரம் லண்டனில் இருந்து எனது தாய்நாடு திரும்பும் ஆவலுக்கு தடை விதித்தபோதும் ஊடகத்துறையில் நான் பெற்ற டிப்ளோமாவுடன் சென்னை சென்று அன்று தமிழக முதல்வராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இன் உதவியால் அடையாறு திரைப்படக்கல்லூரியின் தொலைக்காட்சி பிரிவில் விரிவுரையாளர் பதவியைப் பெற்றேன். திரைப்படக் கல்லூரியில் கிடைத்த வேலையை தொடரமுடியாத வகையில் எங்கள் மண்ணில் அப்போது நடந்து கொண்டிருந்த அனர்த்தங்களில் பாதிக்கப்டிருந்த எனது குடும்ப நிலை காரணமாக அப்பதவியைக் கைவிட்டு 1986ம் ஆண்டு குடி பெயர்ந்து கனடா வந்து சேர்ந்தேன். அன்று முதல் இன்றுவரை தொலைக்காட்சி வானொலி பத்திரிகை எனப் பலதுறைகளில் இயன்றளவில் எனது பங்களிப்பை செய்து வருகின்றேன். உண்மையை சொல்லப்போனால் எனக்கும் இலக்கியத்திற்கும் எந்த உறவும் கிடையாது அத்துடன் நான் ஒரு எழுத்தாளன் என்றோ தமிழ் அறிவு கொண்டவன் என்றோ எண்ணியதில்லை. நான் ஒரு சாதரண மனிதன் ஆனால் கதைசொல்லும் ஆற்றல் கொண்டவன். அதிலும் திரையில் கதைகள் சொல்வதில் மிக்க வல்லவன் என்றும் என்னைப்பற்றி நானே சொல்லலாம்.

கேள்வி: பொதுவாக இப்போதெல்லாம் திரைப்படத்துறைக்குள் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புபவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்காகவென்றே குறும்படங்கள் எடுப்பார்கள். நீங்கள் அப்படியேதும் முயற்சிகள் செய்திருக்கிறீர்களா? இதை நான் கேட்கும் காரணம் என்னவெனில் இப்புத்தகத்தை வாசித்த பின்புதான் எனக்கே தெரிகிறது இவ்வளவு ஆற்றல் உங்களுக்குள் இருக்கிறதென்று. ஒரு குறும்படத்தை எடுத்தால் அறிமுகம் சுலபம்தானே.
பதில்: உண்மைதான் அதில் சந்தேகம் இருக்காதுதான். கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் அவற்றை செய்து உலகின் முதல்தரமான ஊடகம் என மக்களால் போற்றப்படும் பி.பி.சி நிறுவனத்தில் கடமையாற்றியவர்களே வியந்து பாராட்டி சான்றிதள்கூட தந்திருக்கிறார்கள். அதையும் விட வேறு என்னவேண்டும். அத்துடன் எனது திரைக்கதைப் புத்தகம் எனது தகமை பற்றியும் எடுத்து சொல்லுகிறதே. அது தான் எனது பாணி.
கேள்வி: தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் திரு. எம். என். ஞானசேகரன் அவர்கள் திரைப்படத்துறையில் தங்களுக்குள்ள சிறந்த அனுபவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். எங்கே, எப்படி இந்த அனுபவங்களைப் பெற்றீர்கள்?
பதில்: ஞானசேகரனுடனான அறிமுகம் பற்றி எனது புத்தகத்தில் விபரமாக சொல்லி இருக்கின்றேன். அடையாறு திரைப்படக்கல்லூரியில் எனக்கு அறிமுகமானபோது அவர் ஒளிப்பதிவுத்துறையில் விரிவுரையாளராக அங்கு கடமையாற்றிக் கொண்டிருந்தார். திரைப்படக் கல்லூரியில் தொலைக் காட்சிக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு வேண்டிய பாடத்திட்டத்தை தயாரித்துக்கொண்டு இருந்தபோது, லண்டனில் நான் பயிற்சி பெற்ற பயிற்சி மைய அனுபவங்கள் பற்றியும், அங்கு நான் தயாரித்து இயக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறும்படங்கள் முதலாக பன்னிரண்டு நாடுகளில் இருந்து வந்து பயிற்சி பெற்ற பதினெட்டுப்பேர்கள் தயாரித்த பதினைந்து குறும்படங்கள் பன்னிரண்டு தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பல நிகழ்ச்சிகளில் எனது பங்களிப்புகள்பற்றியும், நான் பெற்ற அனுபவங்கள், எதிர்நோக்கிய பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்று கற்றுக் கொடுத்தார்கள், நான் எப்படி கையாண்டு முதல் தர மாணவானாக அங்கு தேர்ச்சி பெற்றேன் என்பவை பற்றி எல்லாம் எடுத்துச்சொல்லி அவர்களுடன் கலந்து பேசி அடையாறு திரைப்படக்கல்லூரி பாடத்திட்டத்திலும் லண்டன் பயிற்சி வழிமுறைகளை சேர்த்து கொள்ள காரணமாக இருந்தேன். திரைப்படம் தொலைக்காட்சி தொடர்களுக்கு கதைகள் எழுதுவதில், அவற்றை தயாரித்து இயக்குவதில் வருகின்ற சவால்களை எதிர்கொண்டு சிறப்பான முறையில் சமாளிக்கும் திறணை லண்டன் பயிற்சி வாயிலாகப் பெற்றிருக்கிறேன்.

கேள்வி: அகதி வாழ்க்கையைக் கருப் பொருளாகக் கொண்டு இந்த திரைக்கதையைப் புனைந்திருக்கிறீர்கள். இப்படி ஒரு கருப்பொருளைக் கதையாக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் எழுந்தது?
பதில்: நான் எப்போதுமே திரைப்படங்களில் வியபாரம் மட்டும் நோக்கமாக கொண்டு தயாரிக்கப்படும் மசாலா வகைச்சூத்திரக் கதைகளைத் தவிர்த்து, வாழும் இடங்களில் இருக்கும் யதார்த்தங்களை, இயல்பு வாழ்வுடன் ஒன்றிய கதைகளை சுவைபடச் சொல்ல வேண்டும் என விரும்புபவன். அதன் காரணமாக எமது பிறந்த மண்ணை விட்டு எம்போன்ற அகதிகளாக இங்கு வந்த பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் சந்தித்த இடர்கள், எதிர் கொண்ட துயரங்கள் பற்றி அடுத்த சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் எனது திரைப்படத்தில் பதிப்பதுடன், இன்னமும் எமது மண்ணிலும் தமிழ்நாட்டிலும் வாழும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் வெளிநாடுகள் என்றால் ஏதோ சொர்க்க லோகம் என்பதாக கற்பனைகள் கனவுகளில் மிதந்து அது தமக்கு எட்டவில்லை என்பதாக எண்ணி ஏக்கத்துடன் வாழுகின்றனர். அவர்களுக்கும் உண்மை நிலைகளை அறியத்தரவேண்டும் என்பதுதான் எனது அவா.

கேள்வி: இந்த அருமையான கதையைத் திரைப்படம் ஆக்கும் நோக்கம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படியானால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறீர்களா?
பதில்: ஆம். இந்தப்புத்தகத்தை பதிப்பித்து வெளியிட்ட லண்டனில் இருந்து வெளிவரும் நாழிகை சஞ்சிகையின் ஆசிரியர் மாலி அவர்களுடன் இணைந்து அங்கிருக்கும் சில பணவசதி படைத்தவர்களை சந்தித்து இத்திரைப்படத்தில் முதலிடுவது பற்றிப்பேசி அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். அதே வேளை இங்கும் கூட முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்தித்துப் பேசி வருகின்றோம். கனடிய அரசு கூட கனடிய இந்திய கூட்டுத்தயாரிப்புத் திரைப்படங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றது. அதன் ஒரு படியாக கனடிய இந்திய கூட்டுத்தயாரிப்புத் திரைப்படங்களில் முதலிடும் பணத்தில் ஒரு கணிசமான பகுதியை முதலிடுபவர்கள் மீளப்பெறும் வகையில் கனடிய அரசு ஒழுங்குகூட செய்திருக்கின்றது. இங்கு வாழ்பவர்களில் இப்படியான திரைப்படங்களில் முதலிட விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அது பற்றிய சரியான தகவல்களை அறியவிரும்பினால் யாரும் என்னுடன் தயக்கமின்றி தொடர்பு கொள்ளலாம்.

கேள்வி: மூன்று நாடுகளில் இந்தக்கதையின் பின்னணி இருக்கின்றது. ஒரே இடத்தில் படப்பிடிப்பு நடைபெறுமா அல்லது அந்தந்தக் களத்தில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறீர்களா?
பதில்: இன்று உலகம் சுருங்கி தொழில் நுட்பம் பெருகிவிட்டது. அந்தவகையில் இக்கதையை நீங்கள் கேட்டது போல அந்தந்தக் கதைக்களங்களில் முறையாக படப்பிடிப்பை நடாத்தினால் மட்டுமே இக்கதையின் தனித்துவம் பாதுகாக்கப்படும். உதாரணமாக கமல்ஹசன் எடுத்த விஸ்வருபம் திரைப்படத்தில் ஆப்கானிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் கதை நடைபெறுவதாக எடுக்கப்பட்டிருந்தது. அப்படத்தின் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வந்திருந்தாலும் அந்த நாடுகளில் முழுமையாக அப்படம் சுடப்படவில்லை என்பதுதான் உண்மை. அதற்கு முற்றுமுழுதாக கைகொடுத்தது சரியான திட்டமிடல் முறையான செயற்படுத்தல் தொழில்நுட்ப ஆளுமை என்பனவே. திரைப்படத்தில் பங்குபற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆலோசனைகளுடன் சரியான திட்டமிடல் மிகவும் அவசியம். அது முதலிடும் பணம் வீணாக விரையமாகாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் உதவும். விடியலைத்தேடி ஒரு குடும்பக் கதையாதலால் விஸ்வரூபம் திரைப்படத்தை எடுப்பதற்கு செய்த முதலீட்டில் பத்தில் ஒரு பங்குப்பணம் கூட இத்திரைப்படத்தைத் தயாரிப்பதற்குத் தேவைப்படாது என்பதுதான் உண்மை.

கேள்வி: திரைப்படங்களில் பண முதலீடு பற்றி நீங்கள் சொல்லும்போதுதான், முக்கியமான ஒரு கேள்வியை உங்களிடம் கேட்கலாம் என்று நம்புகிறேன். பொதுவாகவே தமிழ்த்திரைப்படங்களில் முதலிடுபவர்கள் நட்டப்படுகிறார்கள் என்ற வகையில்தான் அடிக்கடி தமிழகத்தில் இருந்து சினிமாத்துறை பற்றிய செய்திகள் எமக்குக் கிடைக்கின்றன. முக்கியமாக லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் தயாரித்த கத்தி திரைப்படம் கூட நட்டமடைந்ததாக செய்திகள் வந்தன. அதுவும் தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நடிகரும் அதிகப்படியான தமிழ் இளம் தலைமுறையினரை தன்வசம் இரசிகர்களாக வைத்திருக்கும் நடிகர் விஜய் நடித்த படமே நட்டத்தை தழுவியது என்றால் சினிமாத்துறையில் பணம் முதலிட யார் முன்வருவார்?
பதில்: கண்ணால் காண்பதுவும் பொய் காதால் கேட்பதுவும் பொய், தீரவிசாரித்து அறிவதொன்றுதான் மெய் என்பார்கள். நான் தென்னிந்திய திரைத்துறையுடன் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக நெருங்கிய தொடர்பினை வைத்திருக்கின்றேன். ஆம் முதலிடுபவர்கள் பலர் நட்டமடைகின்றார்கள் சிலர் வங்குரோத்தாகிறார்கள் அதில் சந்தேகமே இல்லை. யார் இவர்கள்? பெரும்பாலும் சினிமா ஒரு கலைத்துறையாக இருந்தபோதும் சிலகோடிகள் முதலிட்டு பல கோடிகள் வருவாயீட்டும் வியாபாரத்துறை என்பதுதான் முற்றிலும் உண்மை. இலாபம் பற்றிய உண்மையை வெளியில் சொன்னால் அரசுக்கு அதிக வரிகட்ட வேண்டி வருமே? தவிர்ப்பது எப்படி? வருமுன் காப்போர்களாக நட்டம் என்றுதான் கதை கட்டுவார்கள். அத்தோடு கந்துவட்டிக்காரர்கள் கருப்புப்பண முதலைகள் ஏமாற்றுப் பேர்வழிகள் என பலர் அதில் இருப்பார்கள் என்பதனை நாம் ஒரு போதும் மறந்துவிடக் கூடாது. இயல்பறிவும் சினிமா பற்றிய அடிப்படை அறிவுதன்னும் இல்லாமல் பணம் பண்ணும் பேராசைத் தூண்டுதலில் வந்து ஏமாற்றுக்காரர்கள் வலையில் விழுபவர்களும், தான் தோன்றித்தனமாக நடப்பவர்களும் நட்டமடைந்து வங்குரோத்தாவது சகஜமே. ஒரு நாளைக்கு தமிழ் நாட்டில் எத்தனை புதிய திரைப்படங்களுக்கு பூஜை போடுகிறார்கள்? நட்டமடைவதே நோக்கமாகத்தான் இத்தனைபேர் முன்வருகிறார்களா?

கேள்வி: எழுத்தாளர் உமா சக்தி அவர்கள் காட்சிகளாகவும், சம்பவங்களாகவும், வசனங்களாகவும் விரியும் இக்கதை ஒரு திரைப்படத்தை நேரடியாகப் பார்க்கும் உன்னத அனுபவத்தைத் தருவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். இதையும்விடச் சிறப்பாக இந்தக்கதையைத் திரைப்படமாக்க முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கின்றதா? தங்கள் திரைப்படத் துறை அனுபவம் இதற்கு சாதகமாக இருக்குமா?
பதில்: இக்கதையை திரைக்கதை வடிவத்தில் எழுதியதன் நோக்கமே ஒரு வேளை திரைப்படமாகாமல் போனாலும் வாசிப்பவர்களுக்கு ஒரு திரைப்படத்தின் கதையை பிறர் ஒருவர் காட்சிவாரியாக சொல்லக் கேட்டுப்பெற்ற அனுபவமாவது இருக்கும் என்ற நம்பிக்கையில்தான். அந்த எனது நம்பிக்கை வீணாகவில்லை என்பதனை உமா சக்தி நிரூபிக்கின்றார். இப்புதகத்தை வாசித்தபின் படமாகத் திரையில் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கவேண்டும் என்பதற்காகவே பல விடயங்கள் இப்புத்தகத்தில் வராதவாறு பார்த்துக்கொண்டேன். ஒரு கதையை திரைப்படமாக இயக்குவதற்கு ஆதாரமாக இருப்பதே இயக்குபவரின் கற்பனை வளமும் அத்துறை பற்றிய அறிவும்தான். அதனை இறைவன் எனக்குஅதிகமாகவே தந்துள்ளான். அத்துடன் பலவருட தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பு இயக்க அனுபவம் கொண்ட அண்ணன் பி. விக்கினேஸ்வரன் மற்றும் அவள் அப்படித்தான் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ஞானசேகரன் போன்றவர்களின் பங்களிப்பும் அதில் இருக்கும்.

கேள்வி: மூன்று திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிய எனது அனுபவத்தைக் கொண்டு பார்க்கும்போது, இந்தக் கதையை அனுபவம்மிக்க உங்களால் சிறப்பாகப் திரைப்படமாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. திரைப்படத்திற்காகச் செலவிடும் தொகையைத் திரும்பப் பெறலாம் என்று நினைக்கிறீர்களா? அல்லது ஆத்ம திருப்திக்காக இந்தக் கதையைத் திரைப்டமாக்க நினைக்கிறீர்களா?
பதில்: திரைப்படத்துறையை நம்பித்தான் வருமானத்திற்காக எனது குடும்ப நிலை இல்லை என்பதனால் ஆத்ம திருப்திக்காகத்தான் இத்திரைக் கதையை நான் படமாக்க விரும்புகிறேன் என்பதுதான் உண்மை. அதற்காக இத்திரைப்படத்தில் நாம் போடும் முதலீட்டைத் தொலைத்து நட்டமடைய வேண்டும் என்பதுமில்லை. இத்திரைக்கதையை வாசிப்பவர்களில் சினிமாத்துறை பற்றி அறிந்திருக்கும் பலரும் என்னிடம் சொல்லும் விடயம் என்னவெனில் இத்திரைக்கதை வணிகரீதியாக வெற்றியடையக்கூடிய அத்தனை அம்சங்களையும் அதனுள் பொதித்து வைத்திருப்பதாக. செல்வத்தில் சிறந்த செல்வம் மக்கள் செல்வம். தமிழகத்தில் திரைப்படத் துறையில் பல கோடீஸ்வரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் அந்தப்பணத்தை கொடுத்தது, கோடீஸ்வரர்களாக்கியது? அவர்களை ஆதரித்து வளர்த்துவிடும் கோடிக்கணக்கான தமிழ் மக்களே தான். கனடிய நாட்டில் இருக்கும் மக்கள் தொகையை போல மூன்று மடங்கில் தமிழ் மக்கள் நாம் உலகம் முழுவதும் வாழுகின்றோம். நல்ல ஜனரஞ்சக கதைகளுக்கு தமிழ் மக்கள் ஆதரவு என்றும் இருக்கும். அது விடியலைத்தேடி திரைப்படத்திற்கும் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் எனக்கு இல்லை. சரியான முறையில் தயாரித்து இயக்கினால் என்னிடம் மீதம் இருக்கின்ற ஆறு திரைக் கதைகளும்கூட தமிழ் மக்கள் மத்தியில் நிச்சயம் வெற்றி பெறும்.

கேள்வி: மக்கள் செல்வத்திற்கு வித்தியாசமான விளக்கம் தந்திருக்கிறீர்கள். நாழிகை ஆசிரியர் திரு. மாலி அவர்கள், யதார்த்தத்துடன் இணைந்த கதை அமைப்பில், பாத்திர சித்தரிப்பில், சம்பவங்களின் தொகுப்பில், உரையாடல்களில் உயிரோட்டத்துடன் இக்கதை ஒன்றியிருப்பதை அற்புதமாகக் காண்பிக்கிறார் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இத்திரைப்படம் எடுக்கப்பட்டால் உரையாடல்கள் எப்படி அமைய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். வழமைபோல திரைப்பட மொழியைப் பாவிப்பீர்களா அல்லது யதார்த்தமான உரையாடல் இடம் பெறுமா?
பதில்: இந்தக் கதையை 2014ம் ஆண்டு கனடாவில் பதிப்புரிமைக்காக எழுத்தாளர்கள் அமைப்பு இணையத்தில் பதியவைத்த உடன் எனது நெருங்கிய நண்பர் மாலியின் பார்வைக்காக அனுப்பிவைத்தபின் அவரது பதிலுக்காக பயத்துடன் காத்திருந்தேன். காரணம் ஈழத்தமிழர்கள் மத்தியில் கலையிலக்கியத்துறையில் அவர் ஒரு கைதேர்ந்த விமர்சகர். ஆதலால் கதை பற்றி என்ன சொல்லுவாரோ என்ற பயம் இருந்தது. ஆனால் எனக்கு அவர் சொன்னது என்னவெனில் இது ஒரு திரைப்படமாக வெளிவரும் பட்சத்தில் தமிழ்த்திரை உலகில் இத்திரைப்படம் ஒரு திருப்புமுனை மைல்கல்லாக இருக்கும் என்று சொன்னார். புத்தகமாக வெளியிடவும் முன் வந்தார். யதார்த்தமான உரையாடல்தான் இத்திரைப்படத்திற்கு சிறப்பைத் தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் எனக்கு இல்லை.

கேள்வி: எந்த ஒரு திரைப்படத்தின் வெற்றியும் கதையில்தான் தங்கி இருக்கின்றது. சிறந்த கதையாக இருப்பதால் இதற்கான கதாபாத்திரங்களை எப்படித் தேர்ந்து எடுப்பீர்கள். யாரையாவது உங்கள் மனதில் வைத்திருக்கிறீர்களா? இது ஒரு மசாலாப்படம் அல்ல என்பதால் பாத்திரங்களின் தெரிவு மிகவும் முக்கியமாகும் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பதில்: பாத்திரத்தை ஏற்று நடிப்பவர்கள் பற்றிய தெரிவு முக்கியமானது. ஏனெனில் திரையில் கதையை கொண்டு செல்பவர்களே அவர்கள்தாம். தமிழக திரைவானில் வர்த்தகரீதியாக வெற்றி பெறத்தேவையான பொருத்தமான நடிகர்கள் தேர்வு மிகவும் முக்கியம். பொருத்தமானவர்கள் சிலர் உள்ளத்தில் உள்ளனர். அத்துடன் முக்கியமான சில கதாபாத்திரங்களில் எம்மக்கள் மத்தியில் வாழும் ஈழத்தமிழ் நடிகர்களையும் ஜொலிக்க வைக்க வேண்டும் என்பதுவும் எனது கனவுகளில் ஒன்று. நடிகர்கள் எனும்போது ஆண்களும் பெண்களும் அதற்குள் அடங்கும்.

கேள்வி: நல்லது, உங்கள் லட்சியம் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். எம்மவர்கள் கனடிய மண்ணில் சாதனைகள் படைக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். உங்கள் வாசகர்களுக்கு, ரசிகர்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?
பதில்: மக்களுக்கு இந்தவிடயம் சென்றடய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் இந்த நேர்காணலை செய்ததற்காக எனது மனப்பூர்வமான நன்றியை உங்களுக்கும் உதயன் ஆசிரியருக்கும் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். ஆழம் அறியாமல் கால்வைக்க கூடாது என்பது உண்மைதான் ஆனால் ஆழம் அறிந்தவனின் உதவியுடன் முயற்சிப்பதில் தவறு ஒன்றும் இருக்க முடியாது. உங்கள் முதலீட்டை திரும்பப் பெறுவதில் எந்தவித சந்தேகங்களும் இருக்க வேண்டியதில்லை. அதற்கு நிச்சயமாக எனது உத்தரவாதம் உங்களுக்கு உண்டு. சிறந்த ஒரு படத்தை தயாரித்த பெருமையுடன் நல்ல ஒரு தொழிலில் முதலிட்டு இலாபம் அடைந்த திருப்தியையும் பெறலாம், மகிழ்சியடையாலாம். நம்பிக்கையுடன் என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி!

பரம் ஜி. – 1-416-230-1107