நான் மதம் மாறவில்லை: வைகோ மறுப்பு

மதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும் இருமுறை பைபிள் வாசிப்பதாகவும் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

அந்த வீடியோவில் லாசரஸ் குறிப்பிட்டுள்ளதைக் குறித்து கேட்டபோது, வைகோ “நான் கிறித்துவனல்ல. நான் எல்லா மதங்களையும் மதிக்கிறேன். எனது மருமகளின் பூஜையறையில் எல்லா தெய்வங்களின் உருவங்களும் இருக்கும்” என்றார்.

லாசரஸ் பேசும் வீடியோவில், வைகோவும் அவரது குடும்பத்தாரும் கிறித்துவர்களாக மாறிவிட்டதாகவும், இயேசுவின் சேவைக்கு அவர்கள் தம்மை அர்பணித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். “அவரது மகளும், மாப்பிள்ளையும் கிறித்துவர்கள். அவர்கள் அமெரிக்காவில் உள்ளனர். எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊழியம் செய்கிறார்கள். வைகோவின் மனைவி ஒரு கிறித்துவர். வைகோ பொது வாழ்வில் உள்ளதால், அவரால் தமது புதிய நம்பிக்கையை அறிவிக்க முடியவில்லை. அவர் என்னிடம், தான் தினமும் இரண்டு முறை பைபிள் வாசிப்பதாகச் சொன்னார். மேலும், எப்படித் தொழவேண்டும் எனக் கேட்டார், நான் அவருக்குக் கற்றுக் கொடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

வைகோ லாசரஸிடம், இது தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைச் சொல்லி, வீடியோ குறித்து தான் கேட்டதாகவும் அதற்கு லாசரஸ், தான் ஒரு சிறிய கூட்டத்தில் பேசிய பேச்சு அது என பதிலளித்ததாகவும் கூறியுள்ளார்.

“அதீத ஆர்வத்தினால் ஏற்பட்ட விளைவு அது” என்ற வைகோ, நம்மிடம் “நானும் எனது சகோதரரும் எங்கள் ஊரிலுள்ள விநாயகர் கோயிலின் பராமரிப்புக்கு தொடர்ந்து பங்களித்து வருகிறோம்” என்றார். மேலும், தன் மகள் ஒரு கிறித்துவரை மணந்துள்ளதாகவும், தன் குடும்பத்திலுள்ள மற்றவர்களைப் பற்றி லசாரஸ் கூறியதில் உண்மை இல்லை என்றும் தெரிவித்தார்.