நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள் தேர்தல் பயத்தால் வேல் துாக்குகின்றனர்

தமிழகத்தில், நாத்திகம் பேசி மக்களை முட்டாளாக்கியவர்கள், இன்று தேர்தல் பயத்தால், வேல் துாக்குகின்றனர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று நடந்தது. மாநில தலைவர் முருகன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வணிகர்கள், தொழிலதிபர்கள் பட்ஜெட்டின் சிறப்புகள் பற்றியும், தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினர். அதே சமயம், தமிழக தொழில்கள் வளர்ச்சியடைய, மத்திய அரசு செய்ய வேண்டிய உதவிகள் குறித்தும் முறையிட்டனர்.
பின், நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

தமிழகத்தில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஒரு எம்.பி., கூட கிடையாது. ஆனால், நாட்டில் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என விரும்பும் பிரதமர் மோடி, தமிழகத்துக்கு, பட்ஜெட்டில் அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளார்.பாதுகாப்பு தொழில் வழித்தடம், மீன்பிடி துறைமுகம், தேசிய நெடுஞ்சாலைகள், ஜவுளி தொழில் வழித்தடம், சைனிக் பள்ளி என, தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களுக்காக, பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.இதை பாராட்ட மனமில்லாத,தமிழக எம்.பி.,க்களும், எதிர்க்கட்சியினரும், தேர்தலுக்காக நிதி ஒதுக்கியுள்ளதாக குறை கூறுகின்றனர்.ஆனால், 2013ல் மத்தியில் ஆட்சியில் இருந்தோர், தேர்தல் வந்த போது கூட, தமிழகத்துக்கு சொற்ப நிதியை ஒதுக்கவில்லை. தமிழகத்தின் கலாசாரத்தை போற்றும் ஜல்லிக்கட்டை, பொய்யான காரணங்களை கூறி தடை செய்தனர்.

மோடி பிரதமரானதும், துாக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களை, இலங்கை அரசிடம் பேசி உயிருடன் மீட்டு, அவர்களின் குடும்பத்துடன் சேர்த்தார்.தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் எப்போதும், பொய் பிரசாரம் செய்வதையே கொள்கையாக வைத்துள்ளன. ஆனால், தமிழக மக்கள் இப்போது அவர்களை நம்பத் தயாராக இல்லை; மத்திய – மாநில அரசுகளின் செயல்பாடுகளை மட்டுமே நம்புகின்றனர்.

தமிழக பா.ஜ., தலைவர் முருகன் வேல் யாத்திரை சென்றதும், அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, தற்போது எதிர்க்கட்சித் தலைவரும் வேல் துாக்குகிறார். நாத்திகம் பேசி, தமிழக மக்களை முட்டாளாக்கிய அவர்கள், தேர்தல் பயத்தால், தற்போது பொட்டு வைக்கின்றனர்; பூஜை செய்கின்றனர். அவர்களை, தேர்தல் களத்தில் தமிழக மக்கள் புறக்கணிப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.