நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்கிரம சிங்கே அறிவித்தார். அதைத் தொடர்ந்து தன் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சேவை, சமீபத்தில் பதவியேற்ற அதிபர் கோத்தபயா ராஜபக்சே, 70, பிரதமராக அறிவித்தார். இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரம் ஒரே குடும்பத்தின் கைக்கு மாறுகிறது.

சமீபத்தில், இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில், கோத்தபயா ராஜபக்சே அபாரமாக வென்றார். அதைத் தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, பதவியில் இருந்து விலகுவதற்கான நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில், புதிய அதிபர் கோத்தபயாவை, நேற்று முன்தினம் இரவு சந்தித்து ரணில் ஆலோசனை நடத்தினார்.நேற்று நாட்டுக்கு ஆற்றிய உரையில், பதவியில் இருந்து விலகுவதாக ரணில் அறிவித்தார்.

அவர் கூறியதாவது:பார்லி.,யில் நமக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. இருப்பினும், அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்சேவுக்கு மக்கள் அதிக ஆதரவு அளித்தனர். அதை ஏற்று என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.அதன்படி, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே, இன்று முறைப்படி விலகுகிறார். இந்நிலையில், நாட்டின் அடுத்தப் பிரதமராக, தன் அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே, 74, நியமிக்கப்பட்டார். இதை கோத்தபயா நேற்று அறிவித்தார். மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு, தம்பி கோத்தபயா பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.

இலங்கை அரசியலில், ராஜபக்சே குடும்பத்தினர் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த, 2005 முதல், 2015 வரை, அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார். அப்போது ராணுவ அமைச்சராக, கோத்தபயா இருந்தார். சபாநாயகராக சமல் ராஜபக்சே இருந்தார். மற்றொரு சகோதரர் பாசில் ராஜபக்சேவும் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.இலங்கையின் வரலாற்றில், அதிபர் மற்றும் பிரதமர் பதவியில் சகோதரர்கள் இருப்பது, இதுவே முதல் முறையாகும்.

பாசில் மற்றும் சமல் ராஜபக்சேவுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரமும், ஒரே குடும்பத்தின் கீழ் வர உள்ளது.இம்ரான் அழைப்புஇலங்கையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபயா ராஜபக்சேவை, தொலைபேசியில் அழைத்து, பாக்., பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்தார். மேலும், பாக்., வரும்படி அவர் அழைப்பு விடுத்துள்ளார். அதை, கோத்தபயா ஏற்றுள்ளார்.

கோத்தபயா அதிபர் தேர்தலில் வென்றதும், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருடைய சார்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவுக்கு சென்று, நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுக்கு வரும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ள கடிதத்தையும் கொடுத்தார். அதன்படி, வரும், 29ல், கோத்தபயா இந்தியா வருகிறார். அதிபராக பதவியேற்றதும் அவர் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.