நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு

இலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினார். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.
 நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி- 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.
அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு எதிராக, இலங்கை அரசியல் கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. தற்போது வரை மொத்தம் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எப்போது விசாரணைக்கு வரும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.