நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுப்பதற்காக, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். அப்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் முடிவாகி உள்ளது என தகவல் வெளியாகியது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் என்பது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக முறையான அறிவிப்பை வெளியிட்டார்.

2019 மக்களவை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி தொகுதியும், தமிழகத்தில் 9 தொகுதிகளும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தி.மு.க. கூட்டணியில் தொகுதிப்பங்கீடு குறித்து தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, அவை எந்த தொகுதிகள் என்பது பிற கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்படும் என ஸ்டாலின் கூறியுள்ளார். ஓட்டலில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தாமல் வெளிப்படையாகவே அறிவித்துள்ளோம் என ஸ்டாலின் குறிப்பிட்டார். கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்ட பின்னர் உள்ள தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.