நாங்கள் யாரையும் செய்தித் தொடர்பாளராக நியமிக்கவில்லை: ரஜினி மக்கள் மன்றம்

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்று அம்மன்றம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக கடந்த 31-ம் தேதி ரஜினி அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பலரும் தொலைக் காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கையில், “சமீப காலமாக தொலைக்காட்சி விவாதங்களில் ரஜினி ஆதரவாளர்கள் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் சிலர் பங்கேற்று தங்கள் சொந்த கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அகில இந்திய ரஜினி நடிகர் மன்றம் மற்றும் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க யாரையும் நாங்கள் நியமனம் செய்யவில்லை என்பதையும் விவாதங்களில் தற்போது பங்கேற்று வருபவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் எங்களால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதையும் பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே தலைவர், ரஜினிகாந்த் கூறியது போல், மன்ற உறுப்பினர்கள் அன்றாடம் நடக்கும் அரசியல் விவாதங்களில் பேசாமல், கட்சி அறிவிப்பு வரும்வரை நமது நேரத்தை மன்றத்தின் கட்டமைப்பை உருவாக்குவதில் செலவழிக்க வேண்டும் என்பதை அறிந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மன்ற உறுப்பினர்கள் யாரும் இப்படி விவாதங்களில் பங்கேற்க எங்களால் நியமனம் செய்யப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொண்டு மேலும் தலைவர் ரஜினிகாந்த் பெயரில், அனுமதிக்கப்படாத யாரும் இந்த விவாதங்களில் பங்கேற்பது முறையல்ல என்பதால் தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் ரஜினி ஆதரவாளர் அல்லது ரஜினி ரசிகர் என்ற பெயரில் தனி நபர் யாரையும் சித்தரிக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.