நவோதய மக்கள் முன்னணித் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கையில், கொழும்பு மாநகர சபை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா (40 வயது) சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.

தலைநகர் கொழும்பில், செட்டியார் தெருவில் உள்ள தமது வியாபார நிலையத்தில் இருந்த போது, காலை 7.45 அளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நவோதய மக்கள் முன்னணி தலைவர், கிருஷ்ணா, 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு சுயேச்சைக் குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கலப்பு முறையில் இம்முறை நடந்த உள்ளுராட்சித் தேர்தலில், நவோதய மக்கள் முன்னணிக்கு இரண்டு போனஸ் ஆசனங்கள் கிடைத்திருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை புறக்கோட்டை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 15 வருடங்களாக நவோதயா பொதுநல அமைப்பை கொழும்பு தலைநகரில் இவர் நடத்தி வந்தார்.

தேர்தலில் போட்டியிருவதற்காக இந்த அமைப்பு நவோதயா மக்கள் முன்னணி என அண்மையில் மாற்றப்பட்டது.

எஸ்.கே. கிருஷ்ணாவின் சமூக சேவையை பாராட்டி அவருக்கு தேசமான்ய, தேசபந்து உள்ளிட்ட பட்டங்களும் வழங்கப்பட்டன.

நவோதயா அமைப்பின் ஊடாக கொழும்பு தலைநகரில் உள்ள சுமார் 20,000 குடும்பங்கள் நேரடியான உதவிகளை பெற்றுவந்ததாக பிபிசி தமிழுக்கு பேசிய அரசியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு பல உதவிகளை செய்துவந்த இவரது அரசியல் வளர்ச்சி ஏனைய சிறுபான்மை கட்சிகளுக்கு பாரிய சவாலாக இருந்துவந்ததாக அந்த ஆய்வாளர் மேலும் குறிப்பிட்டார்