நவம்பர் 7 ல் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறேன் : கமலஹாசன்

நடிகர் கமலஹாசனின் அரசியல் பிரவேசம் எப்போது என்பது குறித்த கேள்வி பல்வேற கருத்துக்கள் நிலவி வருகிறது. ஆனால் தான் டுவிட்டர் மூலம் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டதாக கமல் சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில் தனது பிறந்தநாளான நவம்பர் 7 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, நவம்பர் 7 ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளேன். நம் இயக்கத்தார் என்னுடனும், மக்களுடனும் தொடர்பு கொள்ள வசதியாக ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழகத்திற்கு கடமையாற்ற நினைப்பவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் என்னை கடன்பட செய்வார்கள்.

இளைஞர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்து விட்டது. நமது இயக்கத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோருடன் சேர்ந்து தமிழகத்துக்கு பலம் சேர்ப்போம். இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார். இயக்கம் என நடிகர் கமல் கூறி உள்ளதால் நவம்பர் 7 ல் தனிக்கட்சி துவங்குவது தொடர்பான அறிவிப்பை அவர் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.