நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்ட ஆட்சியின் காலத்தில் விஸ்வரூபம் எடுத்தாடும் இனவாதம்….

மகிந்தா ராஜபக்சா என்னும் கொடுங்கோல் தாங்கிய பொய்யன் ஜனாதிபதியாக ஆட்சி செலுத்திய காலத்தில் இலங்கையில் பல அனர்த்தங்கள் இடம்பெற்றன. இனவாத விதையைத் தூவி சிங்கள மக்களை ஏமாற்றிய வண்ணம் தென்னிலங்கையில் பல வளங்களைச் சூறையாடிய அவர் வடக்கிலும் தெற்கிலும் இடம்பெற்றதை காரணம் காட்டி கோடிக்கணக்கான ரூபாய்களை ஆயுதக் கொள்வனவு மூலம் கொள்ளையடித்து நாட்டை படுகுழிக்குள் தள்ளினார்.போரின் வெற்றியை ஒரு ஏமாற்றும் கருவியாக பாவித்த வண்ணம் யுத்திதில் காயமடைந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வழங்கப்படவிருந்த நிதியையே மோசடி செய்து தனதும் தனது குடும்பம் சார்ந்த உறவினர்கள் நண்பர்கள் ஆகியோரை செல்வந்தர்களாக ஆக்கி அழகுபார்த்தார்.

பின்னர் இலங்கையில் ஒரு பொற்காலம் திறந்து கொண்டு வெளியில் வந்து, மகிந்தாவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா ஆட்சியை அலங்கரித்தார். அவரதுஆட்சியில் பல புதிய விடயங்கள் அரங்கேறின. தமிழ்த் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சியின் ஆசனத்தை அலங்கரித்தார். மனோ கணேசன் போன்றவர்களுக்கு மந்திரிப் பதவிகளை வழங்கியதோடு மட்டுமல்லாது நல்லிணக்க இன ஒற்றுமைக்கான அமைச்சராகஅவரை நியமித்தார்.

ஆனால் நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்ட ஆட்சிக்காலத்தில் தற்போது இனவாதம் விஸ்வரூபம் எடுத்தாடுகின்றது. கௌதம புத்தரை பின்பற்றி புத்த சாசன விடயங்களைப் போதிக்கும் பிக்குகளே இனவாதத்தைப் பேசியும் மதங்கள் தொடர்பான பிளவுகளை ஏற்படுத்தி நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஹெலஉறுமய போன்றஅமைப்புக்கள் இன வாதக் கூச்சல் இடுகின்றன. ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விடயம் கானல் நீர் என்று நாம் அஞ்சுகின்றஅளவிற்கு கெடுதியான விளைவுகள் தோன்றுமோ என்று கலக்கமடையும் நிலை தோன்றியுள்ளது