நரேந்திர மோதி – மஹிந்த ராஜபக்ஷ உரையாடல் : இந்தியா- இலங்கை கூட்டறிக்கை

அமைதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது அவசியம் என்று தனது உரையின்போது இந்திய பிரதமர் மோதி வலியுறுத்தினார். இந்த தகவலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுவு அமைச்சக இணைச் செயலாளர் (இந்தியப் பெருங்கடல் மண்டலம்) அமித் நரங் உறுதிப்படுத்தினார்.

“அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்தி நல்லிணக்கத்தை அடைவதன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கெளரவம் ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உணரும் வகையில் செயல்படுமாறு இலங்கையில் புதிய அரசாங்கத்துக்கு இந்திய பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார்” என்று இந்திய வெளியுறவு அதிகாரி நரங் தெரிவித்தார்.

மேலும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு நாட்டு அரசுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், மக்களின் தீர்ப்புப்படி பேணப்பட்ட நல்லிணக்கத்தை அடைவதன் மூலமும், அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்துவதன் மூலமும் தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து தமது நாடு செயல்படும் என்ற நம்பிக்கையை இலங்கை பிரதமர் ராஜபக்ஷ வெளிப்படுத்தினார் என்றும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம், அங்கு வாழும் தமிழ் சமூகத்திற்கு அதிகாரப்பகிர்வு வழங்க வழிவகுக்கிறது. 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தை செயல்படுத்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த திருத்தம், 1987ஆம் ஆண்டு, நவம்பர் 14ஆம் தேதி, இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ‘ஐக்கியம், இறையாண்மை மற்றும் ஆட்புல உறுதிப்பாட்டைக் கட்டிக்காக்கும் அதேவேளை இலங்கை இனச் சிக்கலைத் தீர்த்து வைப்பதை இந்த திருத்தம் நோக்கமாகக் கொண்டது. தமிழர்கள் வாழும் மாகாண சபைகளுக்கு அரசியல் அதிகாரத்தை கொடுப்பதற்காகவே இந்த 13ஆவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

எனினும், 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த விடுதலைப்புகளுக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான உள்நாட்டு போர் முடிவுக்கு பிறகு அந்த திருத்தம் கள அளவில் அமல்படுத்தப்பட வேண்டும் என ஒலிக்கப்பட்டு வந்தாலும், அது தேர்தல் காலங்களில் தமிழர்களின் கவனத்தையும் வாக்குகளையும் ஈர்க்கும் முழக்கமாகவே இருந்து வருகிறது.

இலங்கையில் குறிப்பாக தமிழர் பகுதிகளிலும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் இந்த முழக்கம், தேர்தல் காலங்களில் வாக்குகளை ஈர்க்கும் வகையில் அதிகமாகவே ஒலிப்பதை கேட்கலாம்.

அந்த திருத்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் அல்லது ரத்து செய்யப்பட வேண்டும் போன்ற குரல் இலங்கையில் சமீபகாலமாக ஒலிக்கப்படுகிறது. இருப்பினும், அதை அங்குள்ள தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் ஆட்சேபித்து வருகின்றன.

இந்திய பிரதமரும், இலங்கை பிரதமரும் நடத்திய பேச்சுவார்த்தையில், கொழும்பு துறைமுகத்தில் ECT திட்டம் தொடர்பான பிரச்சனையை இந்தியா எழுப்பியது. அதை செயல்படுத்த 2019 ஆம் ஆண்டில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தம் கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இலங்கை அரசால் நிறுத்தி வைக்கப்பட்டது.

“இந்த திட்டங்களை செயல்படுத்த புதிய அரசாங்கம் ஆரம்பகால மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்” என்று இந்தியா மற்றும் ஜப்பான் செயல்படுத்தும் திட்டம் குறித்து கேட்டபோது இந்திய வெளியுறவு அதிகாரி நரங் தெரிவித்தார்.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையின்போது, சில இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை விதித்துள்ள தற்காலிக கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய மோதி, அவை நாட்டின் பொருளாதாரத்திற்கும்மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

உளவுத் தகவல் பகிர்வு, தீவிரவாத தடுப்பு, கடும்போக்குவாத மீளாய்வு, திறன் மேம்பாடு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வழங்கவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டதாக இரு நாட்டு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரு தரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி இரு நாடுகளும் இனி அதிக அளவில் ஆலோசனைகள் நடத்தி, துறைமுகங்கள் மற்றும் எரிசக்தி துறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்களை விரைவுபடுத்தவும் நரேந்திர மோதியும் மஹிந்த ராஜபக்ஷவும் ஒப்புக் கொண்டதாக கூட்டறிக்கை மேலும் கூறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நாகரிக தொடர்புகள் மற்றும் கலாசார பாரம்பரியங்களை விவரித்த மோதி, இந்தியா, இலங்கை இடையிலான பெளத்த தொடர்புகளை மேம்படுத்துவதற்காக 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவியை வழங்குவதாக அறிவித்தார்.

பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவாக இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது, இந்தியாவுக்கு இலங்கை நிலுவை பாக்கி வைத்துள்ள கடனை திருப்பித்தரும் அவகாசத்தை தள்ளிவைக்கவும், 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான கூடுதல் பண உதவி கோரும் விவகாரம் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார மீட்புக்கு உதவியுடும் வகையில் ஏற்கெனவே 400 மில்லியன் டாலர்கள் அளவிலான பண மாற்றல் வசதியை இந்தியா வழங்கியிருக்கிறது.