நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: இந்திய பிரதமர் மோதிக்கு இலங்கை பிரதமர் ரணில் வாழ்த்து

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இணையற்ற நட்பு இருப்பதாகவும் அந்த நட்பை யாராலும் மதிப்பிட முடியாதெனவும் தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க
இந்திய அரசின் நிதி உதவியுடன் வடக்கு மாகாணத்திற்கு அவசர ஊர்தி கையளிக்கும் நிகழ்வும், 1990 சுவசெரிய அவசர ஊர்தி சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும், யாழ் மாநகர சபை மைதானத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. இந் நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இணைய வழியில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்த கொண்டு உரையாற்றுகையிலையே இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார நட்பு ரீதியான தொடர்பு குறித்தும் இந்திய பிரதமர் மோதிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,”இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அவசர சிகிச்சையை வழங்கவதற்காக ஊர்திகளை வழங்கியதற்காக இலங்கை மக்கள் சார்பிலும் நானும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இலங்கை: “தமிழர்களுக்கு சம அந்தஸ்து கொடுப்பது ஒன்றே தீர்வு”
“வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான போராட்டம்”
“குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பலாலி விமான நிலைய விரிவாக்கம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி மற்றும் வீடுகளை அமைத்தல் கட்டிக் கொடுக்கின்ற சேவைகள் மாத்திரம் அல்லாமல் மலைநாட்டிலே தோட்டப் பகுதிகளிலே இருக்கின்ற மக்களுக்கும் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கியிருக்கின்றது.”

“பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களே நீங்கள் எமக்கு அளித்த வாக்குறுதிகளின் பிரகாரம் இலங்கைப் பிரஜைகள் முழுவதும் சுகாதாரமான நலமான வாழ்விற்கு இட்டுச் சென்றதற்காக எமது மக்கள் எமது அரசு என் சார்பாக மனமார்ந்த நன்றிகளை மீளவும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இதேவேளை இந்தியப் நாடாளுமன்றத்தில் உங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன். அதே போன்று இலங்கையில் எனக்கு எதிராகவும் சில மாதங்களுக்கு முன்பு இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டிருந்தது. என ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.”

படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image caption
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி
“இந்தியாவிற்கு உதவுவதற்காக எப்போதுமே முன்னிற்கின்ற முதலாவது நாடு இலங்கை. இந்து பெருங்கடலிலே நம்பிக்கை மிக்க பங்குதாரராகவும் இலங்கை இருக்கின்றது. ஆகையினால் எந்தவொரு சந்தரப்பத்திலுமே இலங்கைக்கு ஏற்படுகின்ற இன்ப மற்றும் துன்பம் எதிலுமே இந்தியா முதலாவது நாடாக கலந்து கொண்டு தன்னுடைய பிரதிநித்துவத்தை காட்டி வருகிறது,” என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

இணையம் மூலம் உரையாற்றிய மோதி, தமிழிலும் சிங்களத்திலும் வணக்கத்தை கூறியிருந்தார்.

“நான் இலங்கைக்கு வந்திருந்த பொழுது இலங்கை மக்களுக்கும் அரசிற்கும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இந்த நிகழ்வு நடைபெறுவதை முன்னிட்டு அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

“இலங்கை இந்தியாவின் அயல் நாடு மட்டுமல்ல. தெற்காசியப் பிராந்தியத்திலே இந்து சமுத்திரத்திலே இந்தியாவிற்கு நம்பிக்கை மிக்க பங்குதாரராக இலங்கை இருக்கிறது. எந்த்வொரு சந்தர்ப்பத்திலுமே இலங்கைக்கு ஏற்டபடுகின்ற இன்ப துன்பம் எதிலுமே இந்தியா முதலாவது நாடாக கலந்து கொண்டு அதிலே தன்னுடைய பிரதிநிதித்துவத்தைக் காட்டி வருகின்றது,” என்றார்.