நடிகை சித்ரா மரணம் !! கணவர், மாமனார் மீது சந்தேகமா ?

தமிழ் சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் மற்றும் மாமனாரிடம் காவல்துறையினர் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை ரஸ மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

நடிகை சித்ராவின் சடலம், கடந்த புதன்கிழமை அதிகாலையில் சென்னை நசரத்பேட்டையில் உள்ள விடுதி அறையில் தூக்கிட்ட நிலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.

அந்த விடுதி அறையில் நடிகை சித்ராவும் அவரது கணவர் ஹேமந்தும் தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த நிலையில், சம்பவ நாளில் நள்ளிரவுக்கு பிந்தைய நேரத்தில் அறைக்கு வந்த சித்ரா, தான் குளிக்கப்போவதாகக் கூறி ஹேமந்தை வெளியே இருக்கக் கூறியதாகவும் அதன் பிறகு வெகு நேரமாகியும் அவர் வெளியே வராததால், மாற்றுச் சாவியை வாங்கி அறையை திறந்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் இருந்ததாகவும் ஹேமந்த் காவல்துறை விசாரணையில் கூறினார்.

அவரது கன்னத்தில் நகக்கீறல்கள் இருந்ததால் அவரது மரணம் தொடர்பாக காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், சித்ராவின் தந்தை காமராஜ், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகளின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்குமாறு புகார் அளித்தார்.

சித்ரா, ஹேமந்த் இடையே பதிவுத் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்ததாக தெரிய வந்ததையடுத்து, விதிகளின்படி அவரது மரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்பேரில் சித்ராவின் கணவர், அவரது மாமனார் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, சித்ராவின் உடலை கைப்பற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வுக்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதில், அவரது மரணத்துக்கு காரணம் தற்கொலைதான் என்றும் கன்னத்தில் இருந்த கீறல்கள் சித்ராவின் நக கீரல்கள்தான் என்றும் மருத்துவர்கள் குறிப்பிட்டனர்.