நடிகை அமலாபால் கார் பதிவெண் விவகாரம்: கேரள போலீஸார் புதுச்சேரியில் விசாரணை – 137 உயர்ரக கார்களின் விவரங்களையும் சோதனையிட்டனர்

நடிகை அமலாபால் உயர் ரக காரை புதுச்சேரியில் பதிவு செய்து பதிவெண் வாங்கிய விவகாரம் குறித்து கேரள போலீஸார் போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று விசாரணை நடத்தினர்.

புதுச்சேரியில் நடிகை அமலா பால் விலை உயர்ந்த தனது காரை பதிவு செய்த விவகாரத்தில் முறைகேடு செய்திருப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருந்தார்.

‘இந்த விவகாரத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. அமலாபால் கார் வாங்கியதில் அனைத்து ஆவணங்களும் புதுச்சேரி அரசிடம் சமர்பித்துள்ளார். துறைரீதியாக எந்த தவறும் நடைபெறவில்லை’ என புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து கேரள போக்குவரத்து ஆணைய உதவி செயலர் சந்தோஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் கடந்த 6-ம் தேதி புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவகத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நடிகை அமலாபால் கொடுத்துள்ள ஆவணங்களின் நகல்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில் கேரள போலீஸார் நேற்று புதுச்சேரி வந்தனர். நடிகை அமலாபால் புதுச்சேரியில் கொடுத்த அனைத்து ஆவணங்களையும், அவரது கார் பதிவு செய்யப்பட்டுள்ள சாரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சரிபார்த்தனர். கார் வாங்கும் போது அமலாபால் கொடுத்த ஆவணங்களுடன் அலுவலக கணினியில் பதிவாகியுள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் மற்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் விசாரித்தபோது, “நடிகை அமலாபால் கார் மட்டுமல்லாது புதுச்சேரியில் வாகனப்பதிவு செய்து கேரளாவில் ஓடும் 137 உயர் ரக கார்களின் விவரங்களை போலீஸார் சோதனையிட்டனர். மேலும் இரண்டு நாட்களுக்கு கேரள போலீஸார் புதுச்சேரியில் முகாமிட்டு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தனர்.

அமலா பால் சர்ச்சையால் வருவாய் குறைந்ததா?

‘வாகன பதிவெண் சர்ச்சையால் உயர்ரக கார்கள் பதிவுக்கு வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவது குறைந்துள்ளதா?’ என்று கேட்டதற்கு, ” வாகன பதிவின் மூலம் புதுச்சேரியில் ஆண்டுதோறும் ரூ. 70 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது.

இதர மாநிலங்களை விட வரி குறைவு ஓர் காரணம். இவ்விவகாரங்களினால் உயர் ரக கார் பதிவு சற்று குறைந்திருந்தாலும், ஆண்டு முடிவில்தான் வருவாய் குறைந்துள்ளதா என்பதை உறுதியாக கூற இயலும்’’ என்று போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

————————————————–