நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் போலீசார் சோதனை !!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வீட்டில், பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர்.

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திரிவேதி உள்ளிட்ட 14 பேர் மீது போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா மீதும் குற்றம்சாட்டப்பட்டது. இவர், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயின் உறவினர்(மைத்துனர்) ஆவார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை துவக்கியதும் ஆதித்யா ஆல்வா தலைமறைவானார்.

இந்நிலையில் அவர், மும்பையில் உள்ள நடிகர் விவேக் ஓபராய் வீட்டில் தங்கியுள்ளாரா என, பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர்.

இது குறித்து பெங்களூரு இணை கமிஷனர் சந்தீப் பாட்டீல் கூறுகையில், ஆதித்யா ஆல்வா தலைமறைவாக உள்ளார். உறவினரான விவேக் ஒபராய் வீட்டில் தலைமறைவாக உள்ளதாக தகவல் வந்தது. இதனையடுத்து, கோர்ட்டில் சோதனை நடத்துவதற்கு அனுமதி வாங்கி, மும்பை சென்று விவேக் ஓபராய் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார்.