நடிகர் விவேக் உடல்நிலை மோசம்: தொடர்ந்து எக்மோ சிகிச்சை

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்றுள்ளது. அவரது உடல்நிலை மோசமாக உள்ள நிலையில், தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நகைச்சுவை நடிகர் விவேக். ‛மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். ரஜினி, கமல் தொடங்கி இப்போதுள்ள நடிகர்கள் வரை 200க்கும் அதிகமான படங்களில் காமெடி நடிகராக நடித்தார். நான் தான் பாலா, வெள்ளைப்பூக்கள் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

படங்களில் சமூக கருத்துக்களை கூறி சின்னக்கலைவாணர் என பெயர் எடுத்தவர். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுப்பவர். பசுமை இந்தியாவை முன்னெடுத்து கோடிக்கணக்கான மரக்கன்றுகளை இவர் நட்டுள்ளார். தொடர்ந்து அது தொடர்பான விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். கொரோனா காலத்தில் நாட்டு நலன், பாதுகாப்பாக இருப்பது, தடுப்பூசி போட்டு கொள்வது குறித்து விஷயங்களையும் தனது கருத்தாக டுவிட்டரில் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இன்று(ஏப்., 16) தனது வீட்டில் இருந்த விவேக்கிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து விவேக்கின் மைத்துனர் நமது நிருபரிடம் கூறியதாவது: ‛‛ திடீரென காலையில் லேசாக நெஞ்சு வலிப்பதாக கூறினார். உடம்பெல்லாம் வியர்த்தது. பிறகு அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். எமர்ஜென்சியில் அவர் உள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக்கிற்கு மூச்சுதிணறலும் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பரிசோதனையில் செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாக விவேக்கின் செய்தி தொடர்பாளர் நிகில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஆஞ்சியோ சிகிச்சைக்கு பின்பும் விவேக்கின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. இதையடுத்து எக்மோ கருவி உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.