நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம்’ பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் பேட்டி

ரஜினிகாந்த் முடிவு இடைவேளை தான். என்னை ஆதரித்து நடிகர்–நடிகைகள் ஏப்ரல் 7–ந் தேதி பிரசாரம் செய்வார்கள் என்று பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் கூறினார்.

வாக்குசேகரிப்பு

ஆர்.கே.நகர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் தண்டையார்பேட்டையில் உள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. தேர்தல் பணிமனை அருகே நேற்று காலை மாநகர பஸ்சில் சென்ற பயணிகள், பஸ்நிலையத்தில் நின்ற பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தாமரை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். சாலைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஒழுங்குபடுத்தப்படும். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆதரவு திரட்டினர்.

நடிகர்–நடிகைகள் பிரசாரம்

பிரசாரத்தின் போது கங்கை அமரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாங்கள் சமர்ப்பித்த வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களும் சந்தோ‌ஷமாக இருக்கிறார்கள். பிரசாரத்தின்போது வீதி, வீதியாக சென்று மக்களை சந்திப்பேன். மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

நான் வெற்றி பெற்றவுடன் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களை உங்களுக்கு நேரடியாக கொண்டு வந்து சேர்ப்பேன்.

ஏப்ரல் 7–ந் தேதி முழு திரையுலகமே (நடிகர்–நடிகைகள் உள்பட) பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும். தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய மந்திரிகள், தேசிய தலைவர்கள் வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தான் ஜோக்கர்

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சீட்டு விளையாட்டை போன்று 13 ஜோக்கர்கள் இருந்தாலும் பா.ஜ.க. வெற்றி பெறாது என்று கூறியுள்ளாரே?

பதில்:– மக்கள் அவர்களை (காங்கிரஸ்) தான் ஜோக்கர் ஆக்குவார்கள்.

கேள்வி:– தேர்தல் ஆதரவு தொடர்பாக நீங்கள் தெரிவித்த கருத்துக்கும், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கும் முரண்பாடு இருக்கிறதே?

பதில்:– இது இடைவேளை தான். இதற்கு பின்னர் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர் கூறினார்.