தோனிக்கு பிசிசிஐ ஆதரவு : கிளவுஸ் சர்ச்சை

தோனி அணிந்த ‘கிளவுசில்’ இடம்பெற்றிருந்த முத்திரை துணை ராணுவத்தினுடையது அல்ல எனக்கூறியுள்ள பிசிசிஐ நிர்வாக குழு தலைமை அதிகாரி வினோத் ராய், இதற்காக அனுமதி கேட்டு ஐசிசியிடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடந்தது. இதில், தோனி விக்கெட் கீப்பிங் செய்த போது, ‘கிளவுசில்’ இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் ‘பாலிதான்’ லோகோ பொறிக்கப்பட்டு இருந்தது. தோனி ஏற்கனவே இந்திய ராணுவ கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார்.
இதனால், தோனியின் தேசப்பற்றை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினர். ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) விதிப்படி ”வீரர்கள் அணியும் ஆடை, பயன்படுத்தும் பொருட்கள்(ஜெர்சி, கிளவுஸ் உட்பட) அரசியல், மதம், மற்றும் இன உணர்வுகளை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது” என உள்ளது. இதனால், தோனியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐசிசி, சம்பந்தப்பட்ட லோகோவை தோனி நீக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டிடம் கேட்டு கொண்டது.

 

இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் நிர்வாக குழுவின் தலைவவர் வினோத் ராய் கூறுகையில், அந்த முத்திரையை பயன்படுத்த தோனி சார்பில் பிசிசிஐ முறைப்படி ஐசிசியிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் வியாபாரம், மதம், ராணுவம் சார்ந்து எந்த ‘லோகோ’வையும் பயன்படுத்த க்கூடாது. ஆனால், தோனியின் கிளவுசில், இருக்கும் முத்திரை, மதம், வியாபாரம் சார்ந்தது இல்லை. இது அனைவருக்கும் தெரியும். தோனி கிளவுசில் வைத்திருக்கும் முத்திரை துணை ராணுவத்தினுடையது அல்ல. இந்த முத்திரையை பயன்படுத்த தோனிக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஐசிசியிடம் பிசிசிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது.

முத்திரையை நீக்க வேண்டும் என வேண்டுகோள் தான் வந்துள்ளது. உத்தரவு வரவில்லை. இந்த விவகாரம் கவலைக்குரியது என்றாலும், ஐசிசி அதிகாரிகளுடன் பேசி பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி துவங்கும் முன்னர் இங்கிலாந்து செல்வார். இவ்வாறு அவர் கூறினார்.