தேர்தல் பணப்பட்டுவாடா ஆவணங்கள் சிக்கியதாக தகவல்: கோடநாடு மேலாளரிடம் 6 நாள் விசாரணை – திவாகரன், கிருஷ்ணபிரியாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு கர்ஸன் எஸ்டேட்டில் 6 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை நேற்று நிறைவடைந்தது. இந்த சோதனையின்போது சட்டப் பேரவைத் தேர்தலின்போது தொகுதிகளுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எஸ்டேட் மேலாளரிடம் அதிகாரிகள் 6 நாட்களாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

சசிகலா குடும்பத்தினர், அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 187 இடங்களில் 1,800-க்கும் அதிகமான அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒவ்வொரு நாளும் ஒரு சில இடங்களில் சோதனை நிறைவு பெற்றது. முக்கியமான இடங்களில் 13-ம் தேதி வரை 5 நாட்கள் வரை சோதனை நீடித்தது. எல்லா இடங்களிலும் சோதனை நிறைவுற்ற நிலையில், கோடநாட்டில் உள்ள கர்ஸன் எஸ்டேட்டில் மட்டும் 6-வது நாளாக நேற்றும் சோதனை தொடர்ந்தது.

எஸ்டேட் மேலாளர் நடராஜனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வந்தனர். கர்ஸன் டீ தொழிற்சாலையில் பிடிபட்ட பணம், ஆவணங்கள் தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நடராஜனின் உறவினர்களையும் வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் அதிமுக தலைமை பணப்பட்டுவாடா செய்தததாகவும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை பணம் புழங்கியதாகவும் வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தேர்தல் செலவுக்கான பணம், கோடநாடு எஸ்டேட் மேலாளர் மூலமாகவே பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் பேரிலேயே நடராஜனிடம் 6 நாட்களாக விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது. சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

விசாரணை வளையம்

இதற்கிடையே, வருமான வரி சோதைனையின்போது சிக்கிய ஆவணங்களை வைத்து, அதில் தொடர்புடையவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பி, சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்துகின்றனர். ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலா உறவினர் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் ‘சுரானா’ என்ற பெயரில் தங்க நகை நிறுவனம் உள்ளது. இது சசிகலா குடும்பத்தினரின் பினாமி நிறுவனம் என்று கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திலும் கடந்த 5 நாட்களாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மித்தேஷ், சாந்திலால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். அதைத் தொடர்ந்து இருவரும் நேற்று மதியம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகள்

அதேபோல ஜாஸ் சினிமாஸ் நிர்வாகிகளையும் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து, ஜாஸ் சினிமாஸின் 3 முக்கிய நிர்வாகிகள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் கைமாறியது தொடர்பாக அவர்களிடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர். அனைவரின் வாக்குமூலங்களும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எழுத்துப் பூர்வமாகவும் பெறப்பட்டுள்ளது.

இவர்களைத் தொடர்ந்து சசிகலாவின் சகோதரர் திவாகரன், இளவரசி மகள் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இன்று அல்லது நாளை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராவார்கள் என கூறப்படுகிறது.

அதேபோல புகழேந்தி, விவேக் ஜெயராமன் ஆகியோரும் மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் ஓரிரு நாளில் ஆஜராக உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப் படவுள்ளது.

துப்பாக்கி பறிமுதல் இல்லை

விவேக் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் 3 துப்பாக்கிகளை கைப்பற்றியதாகவும் அதில் ஒரு துப்பாக்கி கள்ளத்துப்பாக்கி என்றும் செய்திகள் வெளிவந்தன. இதுகுறித்து வருமான வரி புலனாய்வுப் பிரிவு தலைமை இயக்குநர் முரளிகுமார் கூறும்போது, ‘விவேக் வீட்டில் இருந்து கள்ளத் துப்பாக்கிகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ என தெரிவித்தார்.