தேயிலை உற்பத்தி அழிவு கண்டால் இலங்கையின் பொருளாதாரமும் அழிந்துவிடும் என்கிறார் முத்தையா முரளிதரன்

பெருந்தோட்ட பயிர் அழிவு கண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் .தெரிவித்துள்ளார்.அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டியில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரை யாற்றும் போதே அவர் இவ் வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்களின் முன் னேற்றத்திற்காக பொது வான பணிகளை முன்னெடுக்க கடந்த இரண்டாயிரமாம் ஆண்டில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.இதுவரை காலமும் எத்தனையோ பொது அமைப்புகள் மலையக மக்களுக்காக சேவையாற்ற முன்வந்திருந்த போதிலும் அவர்கள் வழங்கும் உதவிகள் மக்களுக்கு நேரடியாகச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை.

இருப்பினும் மலையக பிரதேசங்களில் எமது பொதுப்பணிகளை முன்னெடுக்க சரியான அமைப்பு ஒன்று எமக்கு இருக்கவில்லை.ஆகையால் குருவி எனும் அமைப்பின் ஊடாக இப்போது மலையக மக்களுக்கு எமது பொதுப்பணிகள் நேரடியாகச் சென்றடைய வழிவகுத்துள்ளோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள், தம்முடைய மற்றும் தமது பிள்ளைகளின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்திக்கொள்வதற்கு பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

எமது அமைப்பின் ஊடாக பல திட்டங்களை இந்த மக்களுக்கு வழங்கத்திட்டங்களை வகுத்து வருகின்றோம்.அதேவேளையில் அரசு பங்கேற்காத திட்டங்களை மக்களுக்கு எமது பொது அமைப்பின் ஊடாகவே நாம் செய்யவுள்ளோம்.

அதேபோன்று மருத்துவ காப்புறுதி சேவையையும் மலையக மக்களுக்காக உருவாக்க திட்டங்களை வகுத்து வருகின்றோம்.இதன்மூலம் மருத்துவ பிரச்சினையில் கால்வாசியேனும் தீரும். இதுவரை 2000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ள நாம் மேலும் பத்தாயிரம் மாணவர்கள் இனம் காணப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலத்தில் அவர்களுக்கும் இந்த வசதியைச் செய்யவுள்ளோம்.

தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவம், தேயிலை ஏற்றுமதியாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர்கள் என நான்கு பிரிவினரும் ஒன்றிணைந்து ஒருமித்த முடிவுக்கு வரும் நேரத்தில் சம்பள உயர்வுக்கான சாத்தியம் ஏற்படும் வாய்ப்புள்ளது.தொழிலாளர்களுக்கு வருமானம் குறையும் பட்சத்தில் பெருந்தோட்டப் பயிருக்கு அழிவு ஏற்படக்கூடும். அவ்வாறு அழிவு ஏற்படும் போது நாட்டின் பொருளாதாரமும் அழியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.