தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?

உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2017ல் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் இறந்தது. அப்போது, மேலும் குழந்தைகள் பலியாகாமல் சொந்த செலவில் ஆக்ஸிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல உயிர்களை காப்பாற்றியதாக கூறப்படுபவர் டாக்டர் கபீல் கான். அப்போது அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், 9 மாத சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கபீல் கான் மீது எந்த தவறும் இல்லை என்று அறிக்கை அளித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 10ல் அலிகார் முஸ்லிம் பல்கலை.,யில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டாக்டர் கபீல் கான் கலந்து கொண்டு பேசினார். இதில், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட அவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரா சிறையில் அடைக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கபீல்கானை தடுப்புக்காவலில் வைத்திருப்பது சட்டவிரோதம் என கூறியதுடன், அவரது பேச்சில் அலிகார் நகரத்தின் அமைதியை எங்கும் அச்சுறுத்தவில்லை என குறிப்பிட்டு விடுதலை செய்ய உத்தரவிட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகளுக்கு ஆதரவாக தானும், டிராக்டரில் ஆதரவு தெரிவிப்பதாக கபீல் கான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவரது யூடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்ட கபீல் கான், விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு ஆதரவு தருவதாக கூறி டிராக்டர் ஓட்டி சென்றார். பேரணியில் டிராக்டருடன் அவர் பங்கேற்றாரா என தெளிவாக தெரியவில்லை. எனினும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருந்த அவர் விவசாயிகள் பேரணியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக மற்றுமொரு சர்ச்சைக்குரிய பெண் படமும் இணையத்தில் பரவிவருகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கோயிலுக்கு செல்ல முயன்ற பெண் செயற்பாட்டாளர் பிந்து அம்மினியும் டிராக்டர் பேரணியில் பங்கேற்றதாக தெரிகிறது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர், எதிர்ப்பை மீறி சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் செயற்பாட்டாளர் என பலரும் தாங்கள் விவசாயிகள் எனக்கூறிக்கொண்டு பேரணியில் கலந்துக்கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.