தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட, நடராஜர் சிலை, செப்.13ல் சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர் , சிவகாமி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகியுள்ளன. இவைகளில், நடராஜர் சிலை, 37 ஆண்டுகளுக்கு முன் மாயமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த பஞ்சலோக நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ 30 கோடி என தெரிகிறது. தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டறிந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் (Art Gallery of South Australia) 2001ம் ஆண்டில், 75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலையை ஓலிவர் போர்ஜ் அன்ட் பெரன்டன் லிங்க் நிறுவனத்திடம் வாங்கியிருந்தது. தமிழகத்திற்கு சொந்தமான இந்த சிலையை மீட்க சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்க வேல் தலைமையில் முயற்சி எடுக்கப்பட்டது. இந்த சிலை தமிழகத்தை சேர்ந்தது என்றும் இது குறித்து உரிய ஆவணங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழக காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதையடுத்து இந்த நடராஜர் சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனம் முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக இந்த சிலை இன்னும் ஓரிரு நாளில் டில்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டில்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை, விரைவு ரயில் மூலம் செப்.,13ல் சென்னை கொணடு வரப்பட உள்ளதாக பொன்.மாணிக்கவேல் தகவல் அளித்துள்ளார்.