தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக இந்திய அணி ஒரு நாள் தொடரை வென்று வரலாறு

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ரோகித் சதம் விளாச, இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவிர, தென் ஆப்ரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்தது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. நான்கு போட்டிகள் முடிவில், இந்திய அணி 3-1 என முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் கிறிஸ் மோரி நீக்கப்பட்டு ஷாம்சி இடம்பிடித்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி ‘சூப்பர்’ துவக்கம் தந்தது. ரபாடா பந்துவீச்சில் தவான் இரண்டு பவுண்டரி விளாசினார். மார்கல் பந்தை ரோகித் பவுண்டரிக்கு விரட்டினார். தவான் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோஹ்லி (36) ரன்-அவுட்டானார். ரகானே 8 ரன்களில் திரும்பினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த ரோகித், ஒரு நாள் அரங்கில் 17வது சதம் விளாசினார். இவர் 115 ரன்களில் அவுட்டானார்.

நிகிடி ‘வேகத்தில்’ பாண்ட்யா (0), ஸ்ரேயாஸ் ஐயர் (30) சிக்கினர். தோனி 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது. புவனேஷ்வர் (19), குல்தீப் (2) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் அதிகபட்சமாக நிகிடி 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின், களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் மார்க்ரம், ஆம்லா ஜோடி சிறப்பாக விளையாடினார். மார்க்ரம் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். டுமினி (1), டிவிலியர்ஸ் (6) ஏமாற்றினர். ஆம்லா (71) அரை சதம் அடித்து ஆறுதல் தந்தார். மில்லர் 36, கிளாசன் 39 போராடியபோதும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

முடிவில், தென் ஆப்ரிக்க அணி 42.2 ஓவரில் 201 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருதை சதம் விளாசிய ரோஹித் சர்மா தட்டி சென்றார்.