தென் ஆப்பிரிக்கா தொடரைக் கண்டு நடுங்கும் பாகிஸ்தான்: கேப்டன் சர்பராஸ் அகமெடின் மெசேஜ்

2013-ல் கடைசியாக பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்ற போது பாகிஸ்தான் 0-3 என்று செம உதை வாங்கியது. அதுவும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜொஹான்னஸ்பர்கில் பாகிஸ்தான் அதன் மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோரான 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா தொடர் என்றாலே பாகிஸ்தான் வீரர்களுக்கு வயிற்றில் மோட்டார் ஓடுவது எதார்த்தமே.

கடந்த 5 தென் ஆப்பிரிக்க தொடர்களில் பாகிஸ்தான் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடர் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தொடராகும் ஏனெனில் 3 டெஸ்ட்கள், 5 ஒருநாள், 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடுகிறது.

டிசம்பர் 26ம் தேதி பாக்சிங் டே டெஸ்ட் செஞ்சூரியனில் முதல் டெஸ்ட் போட்டியாக நடைபெறுகிறது. தங்கள் சொந்த மண் போன்ற யு.ஏ.இ.இயில் தற்போது 2-1 என்று உதை வாங்கிய மனநிலையில் கடினமான தென் ஆப்பிரிக்கத் தொடருக்குச் செல்கிறது பாகிஸ்தான்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர் பற்றி சர்பராஸ் அகமெட் கூறும்போது, “கடினமான தொடர், வேகமான, எகிறு ஆட்டக்களங்கள், ஆகவே பயமற்ற கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்று வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் சர்பராஸ் அகமெட்.

அசார் அலி, ஆசாத் ஷபீக், பாபர் ஆஸம் ஆகியோரை நம்பியுள்ளது பாகிஸ்தான். பவுலிங்கில் மொகமது அப்பாஸ், மொகமது ஆமிர் ஆகியோருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, ஆனால் தென் ஆப்பிரிக்க பவுலிங்கான ஸ்டெய்ன், ரபாடா, லுங்கி இங்கிடி ஆகியோர் பாகிஸ்தானை பாடுபடுத்தப் போகிறார்கள் என்பது உறுதி.

“அசார், ஆசாத் ஷபீக்கிடமிருந்து பெரிய இன்னிங்ஸ்களை எதிர்பார்க்கிறோம். நல்ல ஸ்கோரை எடுத்தால் நல்ல பந்து வீச்சு எங்களிடம் உள்ளது, ஆகவே வெல்லலாம்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் சர்பராஸ் அகமெட்.

முதல் டெஸ்ட் டிசம்பர் 26, சென்சூரியன், 2வது டெஸ்ட் கேப்டவுன் ஜனவரி 3-7, 3வது டெஸ்ட் ஜொஹான்னஸ்பர்க் ஜன.11-15.