தென்கொரிய அதிபருக்கு எதிராக குற்ற விசாரணை தீர்மானம்

கிழக்கு ஆசிய நாடான தென்கொரியாவில் செனூரி கட்சி சார்பில் பார்க் ஜியுன் ஹை அதிபராக பதவி வகித்து வருகிறார்.

இவர் மீது சமீப காலமாக ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாடு முழுவதும் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொரிய அரசியல் ஊழலில் ஈடுபட்ட சொய் சூன்-சில்லுடன், பார்க் ஜியுன் ஹை நெருங்கி பழகி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

எனவே பார்க் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்தன. இதை வலியுறுத்தி தலைநகர் சியோல் மற்றும் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக மறுத்தால் அவரை பதவி நீக்கம் செய்யுமாறு அரசியல் கட்சிகளை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பதவி விலக நேரிடும்

இந்த நிலையில் அதிபருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நேற்று குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதிபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தியும், பல்வேறு ஊழல்கள் மூலமாகவும் மக்களின் நலன்களை காக்க தவறியதாகவும், அரசியல் சாசன மீறல் மற்றும் குற்ற விதிமீறல்களில் ஈடுபட்டதாகவும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது இன்று (வெள்ளிக்கிழமை) வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிகிறது. இதில் தீர்மானம் வெற்றி பெற்றால், பின்னர் இறுதி முடிவு எடுக்க அரசியல் சாசன கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். 9 நீதிபதிகளை கொண்ட அந்த அமர்வில் பெரும்பாலான நீதிபதிகள் அதிபர் மீதான விசாரணைக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால் பார்க் ஜியுன் ஹை, பதவி விலக வேண்டும்.

பாராளுமன்ற முடிவை ஏற்பேன்

இந்த தீர்மானம் கடந்த வாரம் பதிவு செய்யப்படும் போது எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் என 171 பேர் கையெழுத்து போட்டு இருந்தனர். தற்போது இந்த தீர்மானத்தை ஆளும் செனூரி கட்சியை சேர்ந்த கணிசமான உறுப்பினர்களும் ஆதரிக்க இருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் 300 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 3-ல் 2 பங்கு வாக்குகள் பெற்று இந்த தீர்மானம் வெற்றி பெறும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் பாராளுமன்றத்தின் முடிவை ஏற்பதாகவும், எனினும் இது தொடர்பாக கோர்ட்டு இறுதி முடிவு எடுக்கும் வரை அதிபர் பதவியில் தொடரப்போவதாகவும் பார்க் ஜியுன் ஹை தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் இந்த தீர்மானம் மீது அரசியல் சாசன கோர்ட்டு முடிவு எடுக்க சில மாதங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.