துார்தர்ஷனில் மீண்டும் ராமாயணம் ஒளிபரபப்படும் !!

மக்களின் கோரிக்கையை ஏற்று, 1980களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சி தொடரான ராமாயணம் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 1987 – 1988ம் ஆண்டுகளில் ஞாயிறு காலை தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரதம் ஒளிபரப்பாயின. அந்த காலகட்டத்தில், இந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இந்த தொடர் ஒளிபரப்பாகும்நாட்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படும். சில வீடுகளில் மட்டுமே அப்போது டிவி இருந்ததால், அங்கு கூட்டம் நிரம்பி வழியும். 55 நாடுகளில் 65 கோடி பேர் அந்த நேரத்தில் அந்த தொடர்களை பார்த்தனர்.

latest tamil news

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். இதனையடுத்து ராமாயணம் தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டுவிட்டர் மூலம் ஏராளமான மக்கள் கோரிக்கை விடத்துவங்கினர். இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியது.

latest tamil news

இதனை ஏற்று இத்தொடர்களை நாளை (மார்ச் 28) முதல் தினமும் இரு முறை துார்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவு: மக்களின் கோரிக்கையை ஏற்று, நாளை முதல் ராமாயணம் தொடர், தூர்தர்ஷனில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது என்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன். மார்ச் 28 சனிக்கிழமை முதல் தூர்தர்ஷனில் காலை 9 முதல் 10 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.