துரோகம் செய்தவர்களை விடமாட்டோம்; மேலும் சில ‘ஸ்லீப்பர் செல்’ எம்எல்ஏ.,க்கள் வெளியே வருவார்கள்: தினகரன்

கட்சிக்கு துரோகம் செய்தவர்களை விட மாட்டோம். ‘ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் மேலும் சில எம்எல்ஏ.,க்கள் எங்கள் அணிக்கு வருவார்கள் என்று டிடிவி தினகரன் கூறினார்.

சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உங்கள் அணிக்கு இன்னும் எம்.எல்.ஏக்கள் வருவார்களா?

இன்னும் வருவார்கள் ஸ்லீப்பர் செல்லாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவராக வர உள்ளனர்.

மத்திய அமைச்சர்களை அதிமுக அணியினர் சென்று சந்தித்து வருகிறார்களே?

டெல்லி சென்று அவர்களை சந்திக்கின்ற முதல்வர், துணை முதல்வருக்கு தவறான ஆலோசனையை மத்திய அரசு கொடுக்கிறது.

அதிமுக பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று விதி உள்ளது. ஆனால் பயன்படுத்துகிறார்கள். பொதுக்குழுவில் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட துணைப்பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று தீர்மானம் போடுகின்றனர்.

122 எம்.எல்.ஏக்கள் வந்ததாக சொல்கிறார்கள். 21 பேர் இங்கே உள்ளனர், ஆதரவு அணியினர் 3 பேர் தனியாக உள்ளனர். அப்படி இருக்கும் போது அங்கே எப்படி 122 எம்.எல்.ஏக்கள் எப்படி ஆஜராகி இருக்க முடியும்?

மத்திய அரசிடம் நாங்கள் எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளனர். அன்று கூவத்தூரில் அடைத்து வைத்திருந்ததாக ஓபிஎஸ் சொன்னாரே அதே போல் இன்று எடப்பாடி சொல்கிறார்.

துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். துரோகம் வீழ்த்தப்பட வேண்டும். நல்ல தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தவிர எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

பாஜகவின் அழுத்தம் உள்ளதாக 3 ஆதரவு எம்.எல்.ஏக்கள் தெரிவித்துள்ளனரே?

எடப்பாடி அரசின் மீது அழுத்தம் உள்ளதாகத்தானே சொல்கிறார்கள் அதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

நீங்கள் பாஜக அழுத்தம் கொடுப்பதாக நினைக்கிறீர்களா?

ஊழல் ஆட்சி என்று சொன்னவர்களுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு எப்படியாவது ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்று நினைக்கிற எடப்பாடி போன்றவர்கள் சரியில்லாத போது நாம் அடுத்தவர்களை குற்றம் சொல்ல முடியாதல்லவா.

எங்களால் நியமிக்கப்பட்டவர்கள் துரோகம் செய்ததால் தான் பிரச்சனையே. முதல்வர் தாமாக முன் வந்து பதவி விலக அவகாசம் கொடுத்துள்ளோம். இவ்வாறு தினகரன் பேட்டி அளித்தார்.