துருக்கி ‘ஒருபோதும் போர் நிறுத்தத்தை அறிவிக்காது’ -அதிபர் எர்டோகன்

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்தார். ஆனால் எதற்கும் அஞ்சப்போவதில்லை என்றும், சிரியாவில் குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை என்றும் துருக்கி அரசு தெரிவித்தது.

வடகிழக்கு சிரியாவில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக துருக்கி ஒன்பதாவது நாளாக தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அங்கு தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடந்த 9-ம் தேதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை நேற்று வெள்ளை மாளிகை வெளியிட்டது. ஆனால் டிரம்ப் எழுதிய கடிதம் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடிதத்தை அதிபர் எர்டோகன் முழுமையாக நிராகரித்து குப்பைத் தொட்டியில் எறிந்ததாக துருக்கி அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் வடக்கு சிரியாவில் போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க கோரிக்கையை நிராகரித்ததோடு, அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடைகள் குறித்தோ அல்லது துருக்கிய எல்லையை நோக்கி ரஷ்ய ஆதரவுடைய சிரியப் படைகளின் முன்னேற்றம் குறித்தோ அவர் கவலைப்படவில்லை என்று கூறி உள்ளார்.

நாங்கள் ஒருபோதும் போர்நிறுத்தத்தை அறிவிக்க மாட்டோம். (வடக்கு சிரியாவில்) போர் நடவடிக்கையை நிறுத்துமாறு அவர்கள் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். அவர்கள் பொருளாதாரத் தடைகளை அறிவிக்கிறார்கள். எங்கள் குறிக்கோள் தெளிவாக உள்ளது. எந்தவொரு தடைகளையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என கூறினார்.