தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.15 முதல் 17-ம் தேதி வரை: சென்னையில் இருந்து 4,820 சிறப்பு பேருந்துகள் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15 முதல் 17-ம் தேதி வரை சென்னையில் இருந்து 4,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முந்தைய தினங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் செல்வது வழக்கம். ஏற்கெனவே, ரயில்களில் டிக்கெட்கள் விற்று முடிந்துவிட்ட நிலையில், தற்போது சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்து வருகிறது. இருப்பினும், அனைவருக்கும் ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை.

மேலும், பண்டிகையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கட்டணத்தை அதிகரிக்கும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், பெரும்பாலானவர்கள் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளையே நம்பியுள்ளனர். இதற்காக பண்டிகைக் காலங்களில் சிறப்புப் பேருந்துகளை அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கி வருகின்றன. கடந்த ஆண்டு வழித்தட அடிப்படையில் பொதுமக்கள் வசதிக்காக சென்னையை சுற்றியுள்ள 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், வழக்கமாக நகருக்குள் ஏற்படும் பேக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. சொந்த வாகனங்களில் செல்வோருக்கும், நெரிசலில் சிக்காமல் எளிதாக செல்வதற்கான புதிய வழித்தடங்களை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்தனர்.

இந்த ஆண்டும் அதேபோன்ற திட்டத்தை தமிழக போக்குவரத்துத் துறை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு போக்குவரத்துத் துறை மூலம் செயல்படுத்த இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் எம்டிசி அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில், போக்குவரத்துத் துறை செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இணை செயலர் எஸ்.நடராஜன், இணை ஆணையர் வேலுசாமி, மேலாண் இயக்குநர்கள், மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர், காஞ்சிபுரம் எஸ்பி மற்றும் வருவாய், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்ட முடிவில் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தீபாவளிக்கு 7,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு தீபாவளியின்போது நெரிசலை தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணாநகர் மேற்கு மாநகர பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், மாநில தேர்தல் ஆணைய அலுவலக பேருந்து நிறுத்தம் ஆகிய 5 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. தினசரி இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் 4,208 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவற்றில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 79 பேர் பயணித்தனர்.

இந்த ஆண்டும் தீபாவளியின்போது கோயம்பேடு, தாம்பரம் சானடோரியம், அண்ணாநகர் மேற்கு, பூந்தமல்லி, ஊரப்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 15 முதல் 17 வரை வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 4,820 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.

இதுதவிர கே.கே.நகர், கிண்டி ஆகிய இடங்களை போக்குவரத்து காவல் துறையினர் ஆய்வு செய்து, அதில் ஒரு இடத்தை தேர்வு செய்வார்கள். அங்கிருந்தும் பேருந்துகள் இயக்கப்படும்.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 287 பயணிகள் முன்பதிவு செய்து பயணித்தனர். இந்த ஆண்டு தற்போது வரை 32,204 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.