தி.மு.க., வில் எம்.எல்.ஏ., ‘சீட்’ வேணுமா ? – ரூ.5 கோடி குடுங்க !!

தி.மு.க.,வில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்போரிடம், கட்சி தலைமை, 5 கோடி ரூபாய் வழங்க நிர்ப்பந்தம் செய்வதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, தி.மு.க., பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தொகுதிக்கு, ஐந்து பேரை தேர்வு செய்து, அவர்களில் ஒருவரை வேட்பாளராக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், போட்டியிட வாய்ப்பு கேட்டு, ஒவ்வொரு தொகுதியிலும், பலர், கட்சி தலைமைக்கு மனு அளித்துள்ளனர். சிலர், கனிமொழி, துர்கா ஸ்டாலின், உதயநிதி, துரைமுருகன் சிபாரிசில், போட்டியிட முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர், தலைமைக்கு, 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அத்துடன், தங்களின் தேர்தல் செலவுக்கு, 5 கோடி ரூபாயை தயாராக வைத்திருப்பதற்கான ஆதாரங்களை வழங்க வேண்டும்.வேட்பாளரிடம் பெற்ற பணத்தை, ஒவ்வொரு தொகுதியிலும் குழு அமைத்து, அவர்களிடம், 5 கோடி ரூபாய், தலைமை மூலம் வழங்கப்படும். அப்பணத்தை, குழுவினர், ஓட்டுச்சாவடி, கட்சியினரின் செலவுக்கு பயன்படுத்திக் கொள்வர்.

அதேநேரம், நோட்டீஸ், போஸ்டர், தோரணம், கட்சி அலுவலகம் திறப்பு உள்ளிட்ட பிற செலவுகளை, வேட்பாளரே மேற்கொள்ள வேண்டும் என, தலைமையில் இருந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.இதனால், போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து, ஓராண்டுக்கும் மேலாக, தொகுதியில் பணத்தை அதிகளவில் செலவு செய்து, வேலை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அதே நேரம், அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து, தி.மு.க.,வுக்கு வந்த பெரும் புள்ளிகள், தலைமை நிபந்தனையை ஏற்று, பணம் கட்ட தயாராவதால், பல ஆண்டாக கட்சி பணியாற்றிய, தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.