தி மு க வின் கூட்டாளி திருமாவளவனின் இந்து பெண்களை அவமதித்து பேச்சு

இந்து பெண்கள் அனைவரையும் விபச்சாரிகள் என தி மு க வின் கூட்டாளி & விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. அவருக்கு எதிராக டுவிட்டரில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்து மதம் மீது எப்போதும் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். இந்து மதத்தையும், அதன் நம்பிக்கையையும் இழிவாக பேசி, பிற மதங்களை உயர்த்தி பேசி வருகிறார். இந்நிலையில் ஒரு இணையதள கருத்தரங்கில் பேசிய திருமாவளவன், ”இந்து தர்மம் படி (மனு தர்மம்) எல்லா பெண்களுமே விபச்சாரிகள் தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது எல்லா தரப்பு பெண்களுக்கும் பொருந்தும். சனாதன தர்மம் இதை சொல்கிறது” என பேசி உள்ளார்.

இவரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனதால் திருமாவளவனுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன. ”ஒரு எம்.பி.யாக இருக்கும் இவர், இது போன்ற ஒரு கருத்தை ஒட்டுமொத்த பெண்களுக்கு எதிராக பேசுவது முறையல்ல” என தெரிவித்துள்ளனர். சிலர், ”தொடர்ந்து மத ரீதியாக குறிப்பாக இந்து மதத்தை பற்றி இழிவாகவும், இந்து பெண்களை பற்றி இழிவாகவும் பேசும் இவரை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இன்னும் சிலரோ, ”அப்படியே அந்த மனு தர்ம புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தாலும் அதை ஏன் ஒரு பொது வெளியில் பேசணும், ஒட்டுமொத்த பெண்களை இப்படி அசிங்கப்படுத்த வேண்டும்” என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலரோ, ”அந்த கருத்தை உடைய புத்தகத்தை நாங்கள் எதிர்க்கிறோம். எங்களின் தாயாகவும், சகோதரியாகவும் இருக்கும் பெண்களை இப்படி பேசியது முறையல்ல” என கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இதனால் டுவிட்டரில் #பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆனது. சிலர் எல்லை மீறிய கருத்துக்களையும், மீம்ஸ்களையும் பதிவிட்டுள்ளனர். அதோடு, இதற்கு முன்பு இந்து மதம் பற்றி இவர் அவதூறாக பேசிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சமூகவலைதளங்களில் இப்படியொரு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து டுவிட்டரில், ”காலங்காலமாகப் பெண்களை இழிவுசெய்வது மனுதர்மம் என்னும் சனாதனமே! அதுபற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல்! அவதூறுகளுக்கு அஞ்சேல்!” என பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.

மேலும், ”காலம் காலமாகப் பெண்களை இழிவுசெய்யும் #மனுதர்மம் எனும் சனாதன நூலைத் தடைசெய்ய வலிறுத்தி, அக்., 24 அன்று மாலை 3மணியளவில் தமிழகம் முழுவதும் விசிக_ஆர்ப்பாட்டம் செய்யும். அவதூறு பரப்புவோர் முகத்திரை கிழிப்போம்!” என மற்றொரு டுவீட்டில் தெரிவித்துள்ளார்.

திருமாவளவனின் இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பால் டுவிட்டரில் இவருக்கு ஆதரவாக #பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா என்ற ஹேஷ்டாக்கிற்கு எதிராக #பெண்ணுரிமை_போராளி_திருமா என்ற ஹேஷ்டாக்கை அவரது ஆதரவாளர்கள் டிரெண்ட் செய்தனர்.

இதற்கிடையே திருமாவளவன் சர்ச்சை பேச்சு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசா்ர வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.