தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார் – முதல்வர், இ.பி.எஸ்

தி.மு.க., ஆட்சியில், மதுரைக்குள் நுழைய முடியாத ஸ்டாலின், தற்போது அதே மதுரையில், சுதந்திரமாக நடைப்பயிற்சி செய்கிறார். சட்டம் – ஒழுங்கு சரியாக இருப்பதே, இதற்கு காரணம்,” என முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.

திண்டுக்கல் லோக்சபா தொகுதி, பா.ம.க., வேட்பாளர், ஜோதிமுத்து, கரூர், அ.தி.மு.க., வேட்பாளர், தம்பி துரை, நிலக்கோட்டை சட்டசபை தொகுதி வேட்பாளர், தேன்மொழியை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., வேடசந்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநியில் பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:’டிவி’யில் வந்தது தேர்தல் கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு. நான், 2016ல் எடப்பாடியில் போட்டியிட்டேன். கருத்துக்கணிப்பில், வெற்றி பெற மாட்டேன் என்றனர். ஆனால், 42 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன்.தமிழகத்திற்கு அதை செய்வோம்; இதைச்செய்வோம் என, ஸ்டாலின் பேசுகிறார். 15 ஆண்டுகளாக மத்திய கூட்டணி அரசில் இருந்த, தி.மு.க.,வினரால், அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் நலம் பெற்றனர்.

ஸ்டாலின், ‘பெண்களுக்கு பாதுகாப்பில்லை’ என்கிறார். தி.மு.க.,வினர் தான், பெண்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். அவர்கள் ஒழுங்காக இருந்தால், பெண்கள் பாதுகாப்பாக இருப்பர்.திருப்பதி கோவில் போல, பழநி முருகன் கோவிலை மாற்ற திட்டம் உள்ளது. கொடைக்கானல் கூட்டு குடிநீர் திட்டம், பழநியில் காய்கறிகள் பதப்படுத்தும் கிடங்கு, 15 கோடி ரூபாயில் நடக்கிறது.

கொடைக்கானல் ஏரியை துார்வாரவும், நீர்செறிவை அதிகரிக்க தடுப்பணைகள் அமைக்கப்படும். பழநி – தாராபுரம் சாலையில் ரயில் போக்குவரத்தின் போது நெரிசலை சரிசெய்ய மேம்பாலங்கள் கட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.